ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள், பாஸ்போர்ட், விசா மற்றும் ஆவணச் சான்றளிப்பு சேவைகளுக்காகத் தேர்வுசெய்யும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனெனில், நான்கு இந்தியத் துணைத் தூதரக விண்ணப்ப மையங்கள் (ICACs) மூடப்படுவதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மையங்கள் மூடப்படுவதாக விவரித்த தூதரகம், அக்டோபர் 22, வியாழக்கிழமை முதல் நான்கு மையங்களிலும் சேவைகள் நிறுத்தப்படும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, அல்ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் மையங்களின் எண்ணிக்கை 16-லிருந்து 12-ஆகக் குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மையங்கள் முசஃபா, அல் ரீம், துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்-I மற்றும் ஷார்ஜாவில் உள்ள அல் மஜாஸ் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
எந்த இந்தியத் துணைத் தூதரக மையங்கள் இன்னும் திறந்திருக்கின்றன?
பின்வரும் 12 மையங்கள் தொடர்ந்து சேவைகளை வழங்கும்:
- அல் தானா
- அல் அய்ன்
- மதீனத் சையத்
- அல் தஃப்ரா
- கயாத்தி
- பர் துபாய்
- இந்தியன் அசோசியேஷன் ஷார்ஜா
- அஜ்மான்
- உம் அல் குவைன்
- ராஸ் அல் கைமா
- ஃபுஜைரா
- கல்பா மற்றும் கோர் ஃபக்கான்
அதிகாரிகளின் கூற்றுப்படி, அனைத்து மையங்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் திட்டமிடப்பட்ட சந்திப்பு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமில்லாமல், காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க உதவும் வகையில், பர் துபாய் மையத்தில் 45 கவுண்டர்கள் உள்ளன.
கூடுதலாக, அவசர உதவி தேவைப்படும் குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்காக, நேரடி வருகை சேவைகளையும் தூதரகம் அறிவித்துள்ளது.
அனைத்து ICAC மையங்களிலும் பின்வரும் பிரிவினர் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்:
- தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்
- பச்சிளம் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்
- அவசரகாலச் சான்றிதழ் (EC) கோரிக்கைகள்
- 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள்
விண்ணப்பதாரர்கள் ஒரு மையத்திற்குச் செல்வதற்கு முன், தங்களின் குறிப்பிட்ட சேவைக்கான தேவைகளைச் சரிபார்க்க வேண்டும்.
இந்திய அரசு, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பாஸ்போர்ட் சேவைக் கட்டணங்களை ஜூலை 1 முதல் திருத்தியமைத்துள்ளது. இது 2012-க்குப் பிறகு முதல் கட்டண உயர்வாகும்.
திருத்தப்பட்ட கட்டண அமைப்பின் கீழ், 36 பக்க பாஸ்போர்ட்டை சாதாரணமாகப் புதுப்பிப்பதற்கு முன்பு 285 திர்ஹம்ஸ் ஆக இருந்த கட்டணம், தற்போது 450 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தட்கால் புதுப்பித்தலுக்கு 900 திர்ஹம் செலவாகும்.
60 பக்க பாஸ்போர்ட்டிற்கான சாதாரண புதுப்பித்தல் கட்டணம் 630 திர்ஹாம் ஆகும், அதே சமயம் தட்கால் புதுப்பித்தல் கட்டணம் 1,080 திர்ஹாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலாக, கூடுதலாக 19 திர்ஹாம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அல்ஹிந்த் முன்னதாகக் கூறியிருந்தது. இந்தக் கட்டணம் நகலெடுத்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற சேவைகளை உள்ளடக்கியது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel