ADVERTISEMENT

பயணி தொலைத்த கைப்பையை அவர் அமீரகம் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருந்து ஒப்படைத்த துபாய் போலீஸ்!

Published: 18 Oct 2026, 6:03 PM |
Updated: 18 Oct 2026, 6:03 PM |
Posted By: Menaka

மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற துபாய் காவல்துறை, தனது நேர்மையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் உடைமைகளைப் பாதுகாப்பதிலும் காவல்துறை தனி கவனம் செலுத்தி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், பயணி ஒருவர் தொலைத்த கைப்பையைப் பத்திரமாக மீட்டு, அவர் மீண்டும் அமீரகத்திற்குத் திரும்பும் வரை பாதுகாப்பாக வைத்திருந்து அவரிடமே ஒப்படைத்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயணி அமீரகத்தை விட்டு வெளியேறியிருந்தபோதிலும், அவரது உடைமையைப் பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் அவரிடம் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்படுவதற்கு முன், துபாய் விமான நிலையத்தில் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்ட ஹேண்ட்பேக்கில் பணம், ஸ்மார்ட்போன் மற்றும் மதிப்புமிக்க தனிப்பட்ட பொருட்கள் இருந்துள்ளது. துபாய் காவல்துறை அந்தப் பையைக் கண்டறிந்து, பாதுகாப்பாக வைத்திருந்து, அவர் மீண்டும் துபாய்க்கு வந்தபோது அவரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இவ்வாறு நிகழ்வது முதல்முறை அல்ல, துபாயில் இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன.

ADVERTISEMENT

இந்த உதவியால் நெகிழ்ந்துபோன அந்தப் பெண், சமூக ஊடகங்கள் வாயிலாக ஐக்கிய அரபு அமீரகம், துபாய் காவல்துறை மற்றும் இந்த விவகாரத்தைக் கையாண்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். இச்சம்பவம், துபாயின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை மீதான தனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விமான நிலையப் பாதுகாப்புத் துறையின் பொது இயக்குநரகத்தின் இயக்குநர் பிரிகேடியர் ஹமீத் அல் ஹாஷெமி கூறுகையில், தனது ஹேண்ட்பேக்கைத் தொலைத்ததை அறிந்தவுடன், அந்தப் பயணி உடனடியாக விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, காவல்துறையினர் அந்தப் பையைத் தேடும் பணியைத் தொடங்கி, தேவையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பின்னர் பை கண்டறியப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஏற்கனவே நாட்டை விட்டுச் சென்றிருந்த அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பை கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், அந்தப் பையை அவர் சென்றடைந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பது அல்லது அவர் மீண்டும் துபாய்க்கு வரும் வரை அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என அதிகாரிகள் அந்தப் பயணியிடம் இரண்டு விருப்பங்களை வழங்கியுள்ளனர்.

இது பற்றி விவரிக்கையில் “அவர் மீண்டும் துபாய்க்கு வரும்போது அதைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அவர் திரும்பி வந்ததும், பையில் இருந்த அனைத்துப் பொருட்களுடனும் அது அவரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அல் ஹாஷெமி கூறியுள்ளார்.

துபாய் காவல்துறையின் அர்ப்பணிப்பு, நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் விரைவான செயல்பாட்டிற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், சமூக ஊடகப் பதிவில், அந்தப் பெண் காவல்துறையினரின் தொழில்முறை அணுகுமுறையையும், தனது பொருட்களைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டிய அக்கறையையும் பாராட்டியதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து தனது நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பயணியின் உடைமை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட இந்தச் சம்பவம், துபாய் காவல்துறையின் கடமை உணர்வையும் நேர்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதுடன், துபாயின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவை நடைமுறைகளையும் எடுத்துக்காட்டுகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel