ADVERTISEMENT

துபாயில் மீண்டும் கின்னஸ் உலக சாதனை: 16.5 கிலோ எடையில் பிரம்மாண்ட தங்கக் காதணிகளை உருவாக்கிய ஜோயாலுக்காஸ்!!

Published: 24 Oct 2026, 8:21 PM |
Updated: 24 Oct 2026, 8:23 PM |
Posted By: Menaka

‘தங்க நகரம்’ (City of Gold) என்று அழைக்கப்படும் துபாய், தனது பெருமைக்கு மேலும் ஒரு மைல்கல்லைச் சேர்த்துள்ளது. கையால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான தங்கக் காதணிகள், அவற்றின் எடை மற்றும் அளவிற்காக இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

‘ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி’ (Joyalukkas Jewellery) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 22 காரட் தங்கத்திலான இந்த ‘ஜும்கா’ (jhumkas) வகை காதணிகளுக்கு ‘மயூரா சகஸ்ரா’ (Mayura Sahasra) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆயிரம் மயில்கள்’ என்று பொருள். இவை மொத்தம் 16.514 கிலோ எடை கொண்டவை. இவை “மிக அதிக எடையுள்ள தங்கக் காதணிகள்” மற்றும் “மிகப் பெரிய அளவிலான தங்கக் காதணிகள்” என இரண்டு பிரிவுகளில் கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காதணிகள், துபாயின் ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ (Gold District) பகுதியில் உள்ள ‘ஜுவல் ஆஃப் ஜாய்’ (Jewel of Joy) எனும் இடத்தில், அக்டோபர் 24 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் துக் அல் மர்ரி அவர்களால், நகைத்துறை பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT
The record-breaking earrings were unveiled at the Jewel of Joy by Joyalukkas, the biggest jewellery destination in the Middle East, located in Dubai Gold District

சுமார் 1.215 மீட்டர் நீளமும், 0.682 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த காதணிகளை உருவாக்க, 55 திறமையான கைவினைஞர்கள் பல மாதங்களாக உழைத்து, மொத்தம் 5,840 மணிநேரத்தைச் செலவிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாயின் வளர்ச்சி தந்த உத்வேகம்

இது குறித்து ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜான் பால் அலுக்காஸ் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களின் நான்கு தசாப்த கால அனுபவமும், துபாயின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டதுமே இந்த யோசனைக்கு ஊக்கமளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

“நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறோம்; இந்த நாடும் துபாயும் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை நேரில் பார்த்திருக்கிறோம். துபாய் பல சாதனைகளை முறியடித்திருப்பதைக் கண்டு, நாமும் துபாய்க்கு ஏதேனும் ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தோம்,” என்று அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

மேலும், நகைத்துறை சார்ந்த படைப்பின் மூலம் துபாயின் சாதனைகளுக்குத் தங்களது பங்களிப்பை வழங்க விரும்பியதாகவும், இந்த முயற்சி உலகளாவிய தங்க வர்த்தக மையமாகத் துபாயின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காதணிகளின் அறிமுகமானது, மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய நகை விற்பனையகமாகக் கருதப்படும் ‘ஜுவல் ஆஃப் ஜாய்’ (Jewel of Joy) திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

மயில் வடிவிலான வடிவமைப்பு மற்றும் கலைத்திறன்

‘மயூரா சகஸ்ரா’ (Mayura Sahasra) என்ற பெயர், இந்திய கலாச்சாரத்தில் நேர்த்தி, பெருமிதம் மற்றும் அழகின் அடையாளமாகக் கருதப்படும் மயிலிலிருந்து ஈர்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காதணிகள், தெற்காசிய நகைகள் மற்றும் மணப்பெண் மரபுகளுடன் பரவலாகத் தொடர்புடைய, பாரம்பரிய மணி வடிவ ஜும்கா வடிவமைப்பைக் கொண்டுள்ளன.

இவற்றின் பெயர், ஒரு தெய்வீக மயில் ஆயிரம் இறகுகளை உதிர்த்ததாகவும், ஒவ்வொரு இறகும் ஒரு பிரார்த்தனை, விருப்பம் அல்லது கனவைக் கொண்டிருந்ததாகவும் கூறும் ஒரு புராணக்கதையைக் குறிக்கிறது. இதன் நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்தப் பறவையின் இறகுகளைப் பிரதிபலிக்கின்றன.

இந்த அறிமுக விழாவில், கின்னஸ் உலக சாதனைகளின் நடுவர் ஒருவர், அல் மர்ரி, ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜாய் அலுக்காஸ் மற்றும் ஜான் பால் அலுக்காஸ் ஆகியோருக்கு இரண்டு பட்டங்களுக்குமான சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

From left to right: John Paul Alukkas, CEO of Joyalukkas; Abdulla Bin Touq Al Marri UAE Minister of Economy and Tourism; Dr. Joy Alukkas, chairman of Joyalukkas Group; and Guinness World Records adjudicator

இவர்களுடன் துபாய் கோல்டன் ஜுவல்லரி குழுமத்தின் லைலா முகமது சுஹைல், துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் ரஷீத் அல்ஹர்மூடி மற்றும் உலக தங்க கவுன்சிலின் லெவி பெசுலு ஆகியோரும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய டாக்டர் ஜாய் அலுக்காஸ், இந்தக் காதணிகளை, துபாய்க்கும் இதை உருவாக்கிய கைவினைஞர்களுக்கும் ஒரு அஞ்சலி என்று விவரித்துள்ளார்.

ஒரே படைப்பின் மூலம் இரண்டு கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றது, தங்கள் குடும்பத்திற்கும், 13 நாடுகளில் உள்ள தங்கள் குழுக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய தருணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சாதனை படைத்த இந்தக் காதணிகள், தங்க நகைகளை ஒரு அசாதாரண அளவில் காட்சிப்படுத்தினாலும், தனது தாத்தா இந்தக் குடும்பத் தொழிலைத் தொடங்கியதிலிருந்து வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் கணிசமாக மாறிவிட்டதாக ஜான் பால் அலுக்காஸ் தெரிவித்துள்ளார்.

22-காரட் மற்றும் 18-காரட் நகைகள் உட்பட, எடை குறைந்த வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு தங்கத் தூய்மைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்நிறுவனம் தனது தொகுப்புகளை மாற்றியமைத்துள்ளது, மேலும் 14-காரட் நகைகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்பதும், மாறிவரும் போக்குகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதும் தங்கள் தொழிலின் மையமாகத் தொடர்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

உலக சாதனை படைத்த காதணிகளை எங்கே காணலாம்?

மயூர சஹஸ்ரா காதணிகள், துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்டில் உள்ள ஜோயாலுக்காஸின் ‘ஜுவல் ஆஃப் ஜாய்’ ஷோரூமில் நிரந்தரமாகப் பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஷோரூம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும், பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் சாதனை படைத்த இந்தக் காதணிகளையும் அதன் நுணுக்கமான கைவினைத்திறனையும் நேரில் காணலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel