ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், துபாயின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஷேக் சையத் சாலையில், ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் திரண்டதால் ஒரு புதிய தோற்றத்தைப் பெற்றது. சாலை முழுவதும் வழக்கமான கார்களின் கூட்டத்திற்குப் பதிலாக, சைக்கிள்கள், வண்ணமயமான ஆடைகள் மற்றும் ஆரவாரம் செய்யும் குடும்பங்களின் கடலாகக் காட்சியளித்தது.
குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ரைடின் ஆறாவது பதிப்பு, நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை அன்று, உடற்பயிற்சி, வேடிக்கை மற்றும் சமூக உணர்வு நிறைந்த ஒரு காலைப் பொழுதிற்காக, பல்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்தது. முதல் முறை சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் முதல் அனுபவம் வாய்ந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் வரை, பங்கேற்பாளர்கள் நகரத்தின் சில முக்கிய அடையாளச் சின்னங்களைக் கடந்து சைக்கிள் ஓட்டும் இந்த அரிய வாய்ப்பை அனுபவிக்க ஒன்றிணைந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இரவு நேர ஏற்பாடுகள்
துபாய் ரைடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே சாலைகளில் முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. இதற்கென நியமிக்கப்பட்டிருந்த ஆதரவுக் குழுக்கள் இரவு முழுவதும் சாலைகளில் பணியாற்றியதாகவும், அதே நேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் பாதை தயாராக இருப்பதை உறுதிசெய்ய சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணி முதலே சாலை மூடப்பட்டிருந்த நிலையில், காலை 5.24 மணிக்குள் ஷேக் சையத் சாலையில் இருந்து வாகனங்கள் அகற்றப்பட்டன. அதேசமயம், சைக்கிள் ஓட்டுநர்கள் தொடக்கப் புள்ளிகளுக்கு வரத் தொடங்கி, தங்கள் பதிவு எண்களைப் பெற்றுக்கொண்டு, பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, காலை 6.15 மணிக்கு, துபாய் காவல்துறை ரோந்துப் படையினரின் வாகன அணிவகுப்புடன் இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சிறந்த சைக்கிள் ஓட்டுநர்களும், தலாபத் டெலிவரி ஓட்டுநர்கள் குழுவும் பின்தொடர்ந்தனர், அதன் பிறகு பரந்த அளவிலான பங்கேற்பாளர்கள் குழு உற்சாகமாக புறப்பட்டது.
அதன் பின்னர், காலை நேரம் செல்லச் செல்ல, அலை கடலென திரண்ட சைக்கிள் ஓட்டுநர்களால் நெடுஞ்சாலை நிரம்பியது. குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்த நிலையில், மேலும் சில பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மற்ற எமிரேட்களிலிருந்து பயணம் செய்ததாகத் தெரிவித்தனர்.
சிலருக்கு, இது அவர்களின் முதல் அனுபவமாக இருந்த நிலையில், மற்றவர்கள் பெரிதும் விரும்பப்படும் இந்த சமூக நிகழ்வின் மற்றொரு ஆண்டிற்காகத் திரும்பியிருந்தனர். குறிப்பாக, கைக்குழந்தைகளும், குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து ஆர்வமுடன் சைக்கிள் ஓட்டினர்.
மேலும், இந்த நிகழ்வு மாற்றுத்திறனாளிகளையும் வரவேற்றது, இது வெவ்வேறு திறன்களையும் அனுபவங்களையும் கொண்ட சைக்கிள் ஓட்டுநர்களை துபாய் ரைடு எவ்வாறு ஒன்றிணைத்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சைக்கிள் பயணத்தைத் தாண்டி, படைப்பாற்றல் மிக்க ஆடைகளும் பண்டிகைக் கால உற்சாகமும் அந்த காலைப் பொழுதை அலங்கரித்தன. பங்கேற்பாளர்கள் கண்கவர் உடைகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகள் மற்றும் வேடிக்கையான அலங்கார உடைகளை அணிந்து வந்திருந்தது, சாலைகளுக்குப் புதிய வண்ணத்தைச் சேர்த்தது.
முக்கியமாக, இந்த ஆண்டு முதன்முறையாக ‘உங்கள் வாகனத்தை அலங்கரியுங்கள்’ (Dress Your Ride) எனும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10,000 திர்ஹம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதற்கிடையில், சைக்கிள் ஓட்டுபவர்கள் தாகமின்றி இருக்க, பயணப் பாதையின் நெடுகிலும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பங்கேற்பாளர்களுக்கு உதவ காவல்துறை ரோந்துப் பிரிவினரும், உதவிக்குழுக்களும் தயார் நிலையில் இருந்தனர்.
நிகழ்வு நிறைவு மற்றும் சாலைகள் மீண்டும் திறப்பு
காலை 7:51 மணியளவில், துபாய் ரைடு நிறைவை நோக்கிச் சென்றது. சைக்கிள் ஓட்டுபவர்களின் கடைசி குழுவினர் பாதையைக் கடந்து செல்ல, பங்கேற்பாளர்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்தனர்.
இதையடுத்து, காலை நேரத்தின் உற்சாகம் மெல்ல மெல்ல மாறியது, இலக்கை அடைந்ததற்கான மனநிறைவு சூழலில் நிலவியது. சாலைகளை மீண்டும் பொதுப் போக்குவரத்திற்குத் திறக்கும் முன், அமைப்பாளர்களும் அதிகாரிகளும் முழுப் பாதையையும் ஒருமுறை சரிபார்த்தனர்.
இறுதியாக, ஷேக் சயத் சாலை காலை 9:04 மணிக்கு மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. காலை 9:16 மணிக்கு ‘துபாய் ரைடு 2026’ (Dubai Ride 2026) வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ‘துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்’ (Dubai Fitness Challenge) தொடங்குவதையும் குறித்தது. இது குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள ஊக்குவிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel