ஐக்கிய அரபு அமீரக அரசால் கடந்த மாதம் நவம்பரில் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திருத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவை முடிவில் வழங்கப்படும் “END OF SERVICE” எனும் பணிநீக்க ஊதியமானது எவ்வாறு கணக்கிடப்படும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதன் நிறுவன முதலாளிகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிக்கும் மற்றும் வேலை சம்பந்தமான வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த புதிய திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம் அமீரக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டமானது தொழிலாளர்களின் வேலை நேரம், வார விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக, அமீரகத்தில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிநீக்க ஊதியம் குறித்தும் இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் அவர்கள், சேமிப்பு திட்டங்கள் போன்ற சேவை முடிவடையும் காலத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வாறு இந்த புதிய சட்டம் பயனளிக்கிறது, எவ்வாறு பல மாற்று வழிகளை வழங்குகிறது என்பதைப் பற்றி கூறியுள்ளார்.
புதிய தொழிலாளர் சட்டம் – தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துதல் குறித்த 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்டம் எண். 33 ஆர்டிகிள் 51 ன் படி, அமீரகத்தில் பணிபுரியக்கூடிய முழுநேர ஊழியர்களுக்கான சேவை முடிவில் வழங்கப்படும் பணிநீக்க ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படும், சட்டம் கூறுவது என்ன என்பது பற்றி கீழே காணலாம்.
1. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒரு தேசிய தொழிலாளி (அமீரக குடிமக்கள்), ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் அமீரக சட்டத்திற்கு இணங்க தனது சேவையின் முடிவில் ஒரு பணிநீக்க ஊதியத்தைப் பெறுவார்.
2. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒரு வெளிநாட்டு தொழிலாளி, ஒரு நிறுவனத்தில் தனது சேவையை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நிறைவு செய்யும் பட்சத்தில் அவருக்கும் சேவையின் முடிவில் ஒரு பணிநீக்க ஊதியத்தை பெற உரிமை உண்டு. அவை அந்த தொழிலாளி ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் மாறுபடும். அவை கீழ்கண்டவாறு கணக்கிடப்படும்.
- ஒரு வெளிநாட்டு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால், அவரின் சேவை முடிவில் வழங்கப்படும் பணிநீக்க ஊதியம், ஆண்டு ஒன்றுக்கு 21 வேலை நாட்களுக்கான ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டும்.
- அதுவே அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருப்பின், அவருக்கான பணிநீக்க ஊதியம், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 21 வேலை நாட்களுக்கான ஊதியம் என்றும், ஆறாவது ஆண்டிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 30 வேலை நாட்களுக்கான ஊதியம் என்ற அடிப்படையிலும் வழங்கப்படும்.
3. ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்திருந்தால், சேவைக் காலத்திற்கு ஏற்ப பணிநீக்க ஊதியத்தைப் பெற உரிமை உண்டு.
4. ஒரு தொழிலாளி தான் பணிபுரியும் காலத்தில் ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்த நாட்கள் சேவையின் காலத்திற்குள் கணக்கிடப்படாது.
5. குறிப்பிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அல்லது ஓய்வூதியப் பலன்களுக்கான சட்டத்திற்கு பாரபட்சம் இல்லாமல், மாதாந்திர, வாராந்திர, தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, வெளிநாட்டுத் தொழிலாளி தான் பணிபுரியும் நிறுவனத்தில் போட்டுக்கொண்ட கடைசி ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற அடிப்படை ஊதியத்தின் (basic salary) அடிப்படையிலும், நிலையான ஊதியமாக இல்லாமல் துண்டு துண்டாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு சராசரி தினசரி ஊதியம் என்ற அடிப்படையிலும் பணிநீக்க ஊதியம் கணக்கிடப்படும்.
6. ஒரு வெளிநாட்டுத் தொழிலாளிக்கான சேவை முடிவில் வழங்கப்படும் பணிநீக்க ஊதியம், அவரின் இரண்டு வருட மொத்த ஊதியத்தின் மதிப்பீட்டிற்கு அதிகமாக இருக்கக்கூடாது.
7. புதிய தொழிலாளர் சட்டத்தின் நிறைவேற்று ஒழுங்குமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப, சட்டம் அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலம் செலுத்த வேண்டிய எந்தத் தொகையையும் தொழிலாளி தனது பணிநீக்க ஊதியத்தில் இருந்து கழிக்கலாம்.
8. தொழிலாளர் அமைச்சரின் முன்மொழிவின் பேரில் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புக்குப் பிறகு, பணிநீக்க ஊதிய முறைக்குப் பதிலாக வேறு முறைகளைப் பின்பற்றலாம். அத்தகைய அமைப்புகளில் பங்கேற்பதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகளை அமைச்சரவையின் முடிவு தீர்மானிக்கும்.