ADVERTISEMENT

அமீரகத்தில் அனுமதியின்றி பிறரை புகைப்படம் எடுப்பது இனிமேல் குற்றம்.. 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம்..!!

Published: 28 Dec 2021, 8:20 AM |
Updated: 13 Mar 2022, 6:27 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது இடங்களில் தனி நபரையோ அல்லது குடும்பத்தினரையோ அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது இனிமேல் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என புதிய சைபர் கிரைம் சட்டம் கூறுகிறது.

ADVERTISEMENT

அமீரகத்தில் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சைபர் கிரைம் சட்டத்தின்படி, அனுமதியின்றி பொதுவெளியில் பிறரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு தண்டனையாக ஆறு மாத சிறை அல்லது 150,000 திர்ஹம்ஸ் முதல் 500,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் அலலது இந்த இரண்டும் சேர்த்தே தண்டனையாகவும் வழங்கப்படும்.

ஜனவரி 2, 2022 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த திருத்தப்பட்ட புதிய சைபர் கிரைம் சட்டம், வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் விதமாக அமீரக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சட்டம், வங்கிகள், ஊடகங்கள், சுகாதாரம் மற்றும் அறிவியல் துறைகளின் தரவு அமைப்புகளுக்கு சேதம் விளைவிப்பது போன்ற சில குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் சைபர் கிரைம் சட்டம் 2012 இன் பெடரல் சட்டம் 5 ல் திருத்தங்கள் செய்யப்பட்டு அமீரக அரசு வெளியிட்டிருக்கும் 2021 இன் புதிய ஃபெடரல் ஆணை எண் 34 ல் ஆன்லைனில் செய்யப்படும் குற்றங்களை உள்ளடக்கிய பெரிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட்வொர்க்குகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப தளங்களின் பயன்பாடு, பொதுத்துறை இணையதளங்கள் மற்றும் தரவுத்தளங்களைப் பாதுகாத்தல், வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதை எதிர்த்து ஆன்லைன் குற்றங்களுக்கு எதிராக சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய சட்டம் இணையதளத்தில் நடைபெறும் மின்னணு மோசடியிலிருந்து பயனாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் தனிப்பட்ட நபரின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. இத்தகைய குற்றத்தில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், மென்பொருள் போன்றவற்றை பறிமுதல் செய்வதற்கான அதிகாரங்களை இது நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.

ADVERTISEMENT

முந்தைய சட்டத்தின்படி, ஒரு அரசாங்க நிறுவனம் அல்லது முக்கிய வசதியின் இணையதளத்தை எவரும் வேண்டுமென்றே சேதப்படுத்தினால் அல்லது இடைநிறுத்தினால், அவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம்ஸ் முதல் 3 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.