ADVERTISEMENT

அமீரகத்தில் காணாமல் போன இந்தியரின் பேசும் கிளி.. கண்டுபிடித்து தந்த நபருக்கு 4,000 திர்ஹம்ஸ் பரிசு..

Published: 10 Feb 2022, 10:36 AM |
Updated: 10 Feb 2022, 1:30 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் ஒரு இந்தியக் குடும்பம் கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளது. தற்பொழுது அது தொலைந்து விட்டபடியால், தங்கள் வளர்ப்பு கிளியினை கண்டுபிடித்து தருபவருக்கு சன்மானமாக 4,000 திர்ஹம்ஸ் வழங்கப்படும் என அக்குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த குடும்பம் வசிக்கும் பர் துபாயில் நிகழ்ந்துள்ளது. கிளியின் உரிமையாளர் அருண் குமார் இது பற்றி கூறுகையில், “நாங்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளோம். மிட்டு என்றழைக்கப்படும் கிளி எங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல. அவர் எங்களுடன் 12 ஆண்டுகளாக இருக்கிறது. அது இல்லாமல் நாங்கள் எப்படி இருக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. எனது பெற்றோர் கிளியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

மேலும், “கிளி எங்கள் அறையில் வாக்கிங் ஸ்டிக்கில் அமர்ந்து கொண்டிருந்த போது நாங்கள் வசிக்கும் குடியிருப்புக் கட்டிடத்தின் மேல் மாடியில் ஜன்னல் பலத்த சத்தத்துடன் மூடப்பட்டது. மிட்டு சத்தம் கேட்டு பயந்து போனது. பயந்து போனதனால் இயற்கையான உள்ளுணர்வு காரணமாக பால்கனி வழியாக பறந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அச்சமயம் காற்று கடுமையாக வீசியபடி இருந்ததால், கிளி வெகுதூரம் சென்றிருக்கலாம்”.

ADVERTISEMENT

“மிட்டுவைப் கண்டுபிடித்து தரும் நபருக்கு 4,000 திர்ஹம்ஸ் பரிசு வழங்குகிறோம். மிட்டுவின் இடது காலில் ஒரு வெள்ளி பட்டை உள்ளது, அதில் ஒரு எண் உள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார்.

குமார் செல்லப் பிராணியைப் பற்றி கவலைப்படுவது இது இரண்டாவது முறையாகும். பேசக்கூடிய தன்மையுள்ள இந்த கிளி கடந்த ஆண்டு மின்விசிறியில் பறந்து அதன் காலில் பலத்த காயம் அடைந்துள்ளது. கிளியின் உடைந்த காலை சரி செய்ய 7,000 திர்ஹம்ஸுக்கு மேல் செலவழித்ததாக அருண் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நீண்ட ஆயுள், பேச்சு மற்றும் ஒலிகளைப் பிரதிபலிக்கும் திறன் கொண்டிருப்பதால் ஆப்பிரிக்க கிரே, இப்பகுதியில் மிகவும் பிரபலமான பறவை செல்லப்பிராணிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் இந்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பாகிஸ்தானியர் ஒருவர் கிளியை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 4,000 திர்ஹம்ஸை அக்குடும்பம் வழங்கியுள்ளது.