ADVERTISEMENT

அமீரகத்தின் புதிய ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பற்றி நாம் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்..!!

Published: 15 May 2022, 3:37 PM |
Updated: 16 May 2022, 7:04 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இறந்ததற்கு பிறகு, அவரின் சகோதரரும் அபுதாபியின் பட்டத்து இளவரசருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது ஜனாதிபதியாக நேற்று (மே 14) அமீரக பெடரல் கவுன்சில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பற்றிய விபரங்களை இங்கே காண்போம்.

ADVERTISEMENT

அமீரகத்தின் ஜனாதிபதியாகவும், அபுதாபி எமிரேட்டின் ஆட்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள 61 வயதான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் மார்ச் 11, 1961 இல் அல் அய்னில் பிறந்துள்ளார். அவர் நவம்பர் 2004 முதல் அபுதாபியின் பட்டத்து இளவரசராகவும், ஜனவரி 2005 முதல் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணை உச்ச தளபதியாகவும் செயல்பட்டு வந்தார்.

அமீரகத்தின் தந்தை என அழைக்கப்படும் அமீரகத்தின் முதல் ஜனாதிபதியான மறைந்த மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடைய மூன்றாவது மகன் அவர் ஆவார். அவரது தாயின் பெயர் ஷேக்கா பாத்திமா பின்த் முபாரக் ஆகும். அவரது மனைவியின் பெயர் ஷேக்கா சலாமா பின்த் ஹம்தான் அல் நஹ்யான் ஆகும்.

ADVERTISEMENT

அல் அய்ன் மற்றும் அபுதாபியில் உள்ள பள்ளிகளில் 18 வயது வரை கல்வி பயின்ற ஷேக் முகமது அவர்கள், 1979 இல் புகழ்பெற்ற ராயல் மிலிட்டரி அகாடமி சான்ட்ஹர்ஸ்டில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் ஏப்ரல் 1979 இல் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு அமீரக இராணுவத்தில் அமிரி காவலர் (உயரடுக்கு பாதுகாப்புப் படை) அதிகாரி மற்றும் அமீரக விமானப்படையில் பைலட் முதல் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி வரை பல பதவிகளை வகித்துள்ளார்.

மறைந்த ஷேக் சையத் மற்றும் மறைந்த ஷேக் கலீஃபா ஆகியோரின் வழிகாட்டுதல்களால் வழிநடத்தப்பட்ட ஷேக் முகமது அவர்கள், அமீரக ஆயுதப் படைகளை மூலோபாய திட்டமிடல், பயிற்சி, நிறுவன அமைப்பு மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்த பெரிதும் உதவியுள்ளார். ஷேக் முகமதுவின் நேரடி வழிகாட்டுதலும் தலைமைத்துவமும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளை பல சர்வதேச இராணுவ அமைப்புகளால் பரவலாகப் போற்றப்படும் ஒரு முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஷேக் முகமது அவர்கள், அபுதாபி கல்விக் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அபுதாபி எமிரேட்டில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்த சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்த்துவதற்கும் மதிப்புமிக்க உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்க அயராது உழைத்துள்ளார்.

சமூகத்தில் கலாச்சார, கலை, இலக்கிய மற்றும் புதுமை அடிப்படையிலான முயற்சிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஷேக் முகமது அவர்கள், கவிதையில் ஆர்வம் கொண்டவராகவும், அமீரக மக்களிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதிலும் சிறந்தவராக மக்களிடையே அறியப்படுகிறார். மேலும் அவர் எமிராட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்க அவர்களை நேரில் சென்று சந்திப்பவராகவும் இருந்து வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தலைமையில் அமீரகம் மேலும் பல சாதனைகளை புரியும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அமீரகத்தின் புதிய ஜனாதிபதிக்கு அமீரக வாழ் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.