ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வானிலையானது மிகவும் தூசி நிறைந்ததாக இருக்கும் என அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் அமீரக குடியிருப்பாளர்களுக்கு இது தூசி நிறைந்த மற்றும் வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, அமீரகம் முழுவதும் வானம் வெயிலாகவும், பகல் நேரத்தில் தூசி நிறைந்ததாகவும் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பலத்த காற்று மீண்டும் மீண்டும் வீசும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், மணிக்கு 15-25 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 35 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் காற்றானது தூசி மற்றும் மணலை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை ஓட்டுமாறும் அலர்ஜியால் அவதிப்படுபவர்களும் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா போன்ற நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தூசி நிறைந்த சூழ்நிலைகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
அத்துடன் அதிகபட்ச ஈரப்பதம் 90 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் செவ்வாய்க் கிழமை காலை மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸிற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.