ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமாக பதவி வகித்த மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தனது 73வது வயதில் மே 13 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அவருடைய மரணத்திற்கு உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் செய்தி மூலமாகவும் அமீரகத்திற்கு நேரடியாகவும் வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் ஐக்கிய அரபு அமீரக தலைமைக்கு இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்க துணை ஜனாதிபதி எம் வெங்கையா நாயுடு மே 15 ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்திய பிரதமரான நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேக் கலீஃபாவின் மறைவிற்கு இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பிரெஞ்சு ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷேக் கலீஃபாவின் சகோதரரும் அமீரக ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் எமிராட்டி மக்களுக்கு இரங்கல் கூறி தனது ஆதரவை தெரிவித்தார். அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்த ஜோர்டான் மன்னர் அப்துல்லா, வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் வந்து அமீரக அதிபர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
அமீரக அதிபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, நாட்டின் தலைநகரான அபுதாபிக்கு வந்த மற்ற தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப், ஓமன் சுல்தான் ஹைதாம், ஜோர்டானின் மன்னர் அப்துல்லா II, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல் சிசி, மற்றும் ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் மற்றும் ஈராக் பிரதம மந்திரி முஸ்தபா அல் காதிமி ஆகியோர் அடங்குவர்.
சவூதி அரேபியாவின் தலைவர்களான இளவரசர் சவுத் பின் நயீப், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண ஆளுநர் இளவரசர் ஹோசம் பின் சவுத், அல் பஹா பிராந்தியத்தின் ஆளுநர் மற்றும்சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரின் ஆலோசகர் இளவரசர் டாக்டர் அப்துல்அஜிஸ் பின் சதாம், சவுதியின் விளையாட்டு அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் துர்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆகியோர் மற்ற அமீரக அதிபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க அபுதாபி வந்தனர்.
பஹ்ரைனில் இருந்து பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமாத் மற்றும் அவரது மகன் இளவரசர் ஈசா பின் சல்மான் ஆகியோர் அமீரகம் வந்து இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் குவைத்தின் பிரதமரும் குவைத் எமிரின் பிரதிநிதியுமான ஷேக் சபா காலித் பின் ஹமாத் மற்றும் கத்தார் அமீரின் தனிப்பட்ட பிரதிநிதி ஷேக் ஜாசிம் பின் ஹமாத் ஆகியோரும் அமீரகம் வந்திருந்தனர்.
பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் இன்று ஐக்கிய அரபு அமீரகம் மே 13 அன்று காலமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இன்று அவர் அமீரகத்திற்கு பயணிக்கிறார். மேலும் இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் அபுதாபி இளவரசரை சந்தித்து இரங்கலை தெரிவித்தார். அத்துடன் அமெரிக்காவின் துணை பிரதமரான கமலா ஹாரிஸ் இரங்கல் தெரிவிக்க அபுதாபி வந்துள்ளார். இதே போன்று மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்களின் மறைவிற்கு தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் அமீரகம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷய் அதிபர் விலாடிமிர் புடின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.




