ADVERTISEMENT

அபுதாபி: உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு.. 120 பேர் காயம்.. 6 கட்டிடங்களிலிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்..!!

Published: 23 May 2022, 9:01 PM |
Updated: 23 May 2022, 9:04 PM |
Posted By: admin

அபுதாபியில் இன்று திங்கள்கிழமை நடந்த கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அபுதாபியில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளிவந்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, 64 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும், 56 பேர் மிதமான காயங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபியின் அல் கலிதியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து அதனால் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடைகள் மற்றும் அந்த உணவகம் இருந்த கட்டிடம் மற்றும் அதற்கு அருகாமையில் இருந்த ஆறு கட்டிடங்களின் முகப்புகளுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெடிவிபத்து நடந்த இடத்தில் சிறப்பு குழுக்கள் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்த கட்டிடங்களின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அபுதாபி காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அபுதாபி காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பெறுமாறும் பொதுமக்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.