வளைகுடா செய்திகள்

குவைத் தொழிலாளர் பற்றாக்குறை: பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகளே பெட்ரோலை நிரப்ப வேண்டும்.. தொழிலாளி பெட்ரோல் நிரப்பினால் கட்டணம்..!!

குவைத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நெரிசல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல நிலையங்களை சுய சேவை நிலையங்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தில் உள்ள Oula Fuel Marketing Company, பெட்ரோல் நிலையத்தில் உள்ள தொழிலாளி டேங்கை நிரப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டால், இப்போது 200 ஃபில்ஸ் (2.50 திர்ஹம்) கட்டணம் வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும் என தற்பொழுது கூறியுள்ளது.

ஓலாவின் தலைவர் அப்துல் ஹுசைன் அல் சுல்தான் இது பற்றி கூறுகையில், சில எரிபொருள் பம்ப்களில் சுய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்களில் எரிபொருளை நிரப்பும் தொழிலாளர்களின் சேவையை ரத்து செய்யவில்லை என்றும் கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை தேர்வு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு நிறுவனத்தால் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும், இதன் மூலம் அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தொழிலாளர்களின் சேவைகளைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில் “தொழிலாளர் நெருக்கடி தீர்க்கப்படும் வரை இந்த சேவை தற்காலிகமாக இருக்கும். தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, நிறுவனத்திற்குச் சொந்தமான பல பெட்ரோல் நிலையங்களில் நெரிசல் அதிகரித்து வருகிறது” என்றும் அல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து “நிறுவனத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது, இதனால் நிலையங்களில் இயங்கும் பம்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்பொழுது தொழிலாளர்களின் எண்ணிக்கை 850 இலிருந்து 350 ஆகக் குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிறுவனம் மட்டுமல்லாமல் குவைத்தில் இருக்கும் பல்வேறு துறைகளிலும் நிறுவனங்களிலும் தொழிலாளர் பற்றாக்குறையை குவைத் சந்தித்து வருகிறது. குவைத்தில் 70 சதவீத வெளிநாட்டினரும் 30 சதவீத குடிமக்களும் இருந்து வந்த நிலையில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 30 சதவீதமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக இந்த தொழிலாளர் பற்றாக்குறையை குவைத் கடந்த சில மாதங்களாக சந்தித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!