எதிஹாட் ரயில் தனது முதல் பயணிகள் ரயில் நிலையத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஃபுஜைரா பகுதியில் நகர மையத்திற்கு அருகே இந்த நிலையம் கட்டப்பட உள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் நேற்று தெரிவித்தது. ஷார்ஜாவிலிருந்து ஃபுஜைரா துறைமுகம் மற்றும் ராஸ் அல் கைமா வரை கட்டப்பட்டு வரும் 145 கிலோ மீட்டர் பாதையை அபுதாபி பட்டத்து இளவரசர் நீதிமன்றத்தின் தலைவரும், எதிஹாட் ரயிலின் தலைவருமான ஷேக் தியாப் பின் முகமது பார்வையிட்டதாக அபுதாபி ஊடகம் தெரிவித்தது.
பயணிகள் ரயில்கள் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதோடு, சுமார் 400 பேர் பயணிக்கலாம், மேலும் இந்த ரயில் சேவைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ள 11 நகரங்கள் மற்றும் பகுதிகளை இணைக்கும். பயணிகள் சேவைக்கான தொடக்கத் நாள் இதுவரை தெரிவிக்கபடவில்லை, ஆனால் 2030-ஆம் ஆண்டின்போது ஆண்டுதோறும் 36 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிஹாட் ரயில் சேவையைப் பயன்படுத்துவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எதிஹாட் ரயிலின் தலைவர் ஷேக் தியாப், எதிஹாட் ரயில் மற்றும் ஸ்பெயினின் CAF நிறுவனத்திற்கு இடையே 1.2 திர்ஹம்ஸ் மதிப்பிலான பயணிகள் ரயில்களை வடிவமைத்தல், தயாரித்தல், வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடந்த ஆண்டுகளில் எதிஹாட் ரயிலின் தேசிய திட்டத்திற்கு அதிபர் ஷேக் முகமது ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கியதாக ஷேக் தியாப் கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணிகள் சேவை வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாக எதிஹாட் ரயில் இருக்கும் என்று இந்த ஒப்பந்தத்தின்போது அவர் தெரிவித்தார்.
அதன்படி நாட்டின் முதல் பயணிகள் ரயில் நிலையம் ஃபுஜைரா நகரின் மையத்தில் கட்டப்படும் என்று அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பயணிகள் சேவைக்கான தொடக்க தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் வைஃபை, பொழுதுபோக்கு அமைப்புகள், சார்ஜிங் வசதிகள் மற்றும் பல்வேறு உணவு, குடிநீர் போன்ற முக்கிய வசதிகள் ரயில் வண்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும்.
முதல் வகுப்பு, வணிக வகுப்பு போன்ற பிரிவுகளின் கீழ் இருக்கைகள் இருக்கும். பயணிகள் அபுதாபி மற்றும் துபாய் இடையே 50 நிமிட பயண நேரத்தையும், அபுதாபியிலிருந்து ஃபுஜைராவிற்கு சுமார் 100 நிமிடங்களிலும் பயணத்தை மேற்கொள்ளலாம், இதனால் பயண நேரங்கள் கணிசமாகக் குறைக்கப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த ரயில் திட்டம், இரட்டைப் பாதையில் 70 சதவிதம் கட்டப்பட்ட நிலையில் வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
ஷார்ஜாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரையிலான பாதையில் 54 பாலங்கள் மற்றும் 20 வனவிலங்குகள் கடக்கும் இடங்கள் உள்ளன. இது ஒன்பது சுரங்கப்பாதைகளையும் கொண்டுள்ளது, இது ஹஜர் மலைகள் வழியாக 6.9 கிமீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அரேபிய வளைகுடாவில் 1.8 கிமீ தூரம் செல்லும் மிகப்பெரிய கனரக சரக்கு ரயில் சுரங்கப்பாதையும் இந்த வழிதடத்தில் அடங்கும்.
நவம்பர் 2021-இல், எதிஹாட் ரயில் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் சுரங்கங்களுக்கான அகழ்வாராய்ச்சிப் பணிகளை, திட்டமிடலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவும், மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை நிலைகளுக்கு இணங்கவும் பணிகளை செய்து முடித்தது.
இந்த எதிஹாட் ரயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைத்தன்மை முயற்சிகளை அதிகரிப்பதோடு கார்பன் வெளியேற்றம் 70 முதல் 80 சதவீதம் வரை குறைக்கும். லாரிகள் வெளியேற்றும் அளவுடன் ஒப்பிடும்போது, 300 லாரிகளுக்கு பதிலாக ஒரே ஒரு ரயில் பயணத்தின் மூலம் பயணத்தை முடித்துக்கொள்ளலாம்.