அபுதாபியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து பொதுப் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை போக்குவரத்து ஆணையமான ITC தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பஸ் கட்டணத்திற்கான புள்ளிகளை பெற அபுதாபியின் போக்குவரத்து ஆணையமான ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் முயற்சியில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது குறித்து ITC தெரிவித்துள்ளதாவது, அபுதாபியின் மத்திய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்ட டெபாசிட் இயந்திரத்தில் ஒவ்வொரு முறையும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுக்கும்போது புள்ளிகளைப் பெறுவதன் மூலம் பொதுப் பேருந்துகளில் இலவச பயணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அந்த புள்ளிகள் உங்களின் ஹஃபிலட் பேருந்து அட்டைகளில் சேர்க்கப்படுவதால், பேருந்து கட்டணங்களைச் செலுத்த புள்ளிகளைப் பயன்படுத்தலாம்.
ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கான புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
- 600ml அல்லது அதற்கும் குறைவான சிறிய பாட்டில்களுக்கு ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
- 600ml மேல் பெரிய பாட்டில்களுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
பேருந்தில் பயணம் செய்ய எப்படி புள்ளிகளைப் பயன்படுத்துவது?
நீங்கள் சேகரிக்கும் புள்ளிகள் உங்கள் ஹஃபிலட் பஸ் கார்டில் சேர்க்கப்படும். நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளில் உள்ள ஹஃபிலத் பேருந்து அட்டையை ஸ்கேன் செய்ய வேண்டும். ITC தானியங்கு கட்டண முறையானது முதலில் உங்கள் கார்டில் உள்ள புள்ளிகளைக் கழித்துவிட்டு, அதன்பின் மீதமுள்ள பேருந்துக் கட்டணத்தை உங்கள் கார்டின் பண இருப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும்.