ஐக்கிய அரபு அமீரகத்தில் கிழக்குப் பகுதிகளில் பெய்த இடைவிடாத கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை நீரில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த குடும்பங்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் ஃபுஜைராவில் சுற்றுலா இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவில் பெய்த கனமழை, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் என்று வானிலை துறை தெரிவித்துள்ளது. அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.