தமிழகத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நபர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் அங்கு பல்வேறு கலாசாரங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் அமீரகத்தின் செஸ் வீராங்கனையான குலவுட் அகமது இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக தனது 2 வயது குழந்தை நூராவுடன் தமிழகம் வந்துள்ளார்.
அமீரகம் அணியின் முக்கிய வீராங்கனையாக குலவுட் அகமது ஒலிம்பியாட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அவர் ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார். குலவுட் அகமது போட்டியில் பங்கேற்கும் தருணத்தில் அந்த அணியில் விளையாடாத மற்ற வீரர்கள் மற்றும் அந்த அணியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பயிற்சியாளர்கள் 2 வயது குழந்தையான நூராவை பார்த்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் அழுதுக்கொண்டிருந்த நூரா ஒலிம்பியாட் அரங்கிற்கு அருகே பெரிய செஸ் காயின்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட செஸ் அட்டையை பார்த்தவுடன் அழுகைய நிறுத்திவிட்டு துள்ளிக் குதித்து அதன் மேல் ஏறி செஸ் விளையாட ஆரம்பித்துவிட்டார்.
செஸ் தன்னார்வலர்கள் மற்றும் அவரை பார்த்துகொண்டு இருந்த செஸ் வீராங்கனைகள் சொல்ல சொல்ல, அந்த காய்ன்களை நகர்த்திய நூரா சுற்றி இருந்த புகைப்பட கலைஞர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்து பக்கங்களிலும் திரும்பி விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தினார்.