வாகனங்களில் பயணிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு நினைவூட்டும் வகையில் அபுதாபி போலீசார் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனங்களின் முன் இருக்கைகளில் உட்கார வைத்து பயணித்த 180 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்களின் முன் இருக்கைகளில் குழந்தைகளை உட்கார வைக்கும் ஆபத்தான பழக்கத்தை குடும்பத்தினர் தவிர்க்க வேண்டும் என அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.
“வாகனங்களின் முன் இருக்கைகளில் குழந்தைகளை உட்கார அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வாகனங்களின் பின் இருக்கைகளில் மட்டுமே உட்கார வேண்டும் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொருத்தமான குழந்தை இருக்கைகளில் அமர வைக்க வேண்டும்” என்று காவக்துறை தெரிவித்துள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கைகளில் உட்கார அனுமதிக்கும் ஓட்டுநர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். அமீரக போக்குவரத்துச் சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட அல்லது 145 செ.மீ.க்கும் குறைவான உயரமுள்ள குழந்தைகள் வாகனங்களின் முன் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுவதில்லை. போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறிய குழந்தைகளை குழந்தை இருக்கையில் அமர வைக்க வேண்டும் மற்றும் வாகனத்தின் பின்புறத்தில் அமரும்போது சீட் பெல்ட் அணியவது கட்டாயமாகும்.