ஐக்கிய அரபு அமீரகத்தில் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான அவசர நிவாரண உதவியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் (MBRGI), உலக உணவுத் திட்டம் மற்றும் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனம் (MBRCH) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் குடும்பங்களுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 1,136 ஆகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர், அதே நேரத்தில் 3,450 கிலோ மீட்டருக்கும் அதிகமான முக்கிய சாலைகள் வெள்ளத்தால் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
முன்னதாக அமீரகத்தின் நிவாரண உதவியில் 3,000 டன் உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.