ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் செவ்வாயன்று ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளார். உக்ரேனிய நெருக்கடிக்கு பயனுள்ள அரசியல் தீர்வுகளை அடைய உதவும் வகையில் அமீரக அதிபர் ரஷ்யா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்த ஷேக் முகமது அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இது குறித்து அமீரக அதிபர் தெரிவிக்கையில், “உக்ரைன் நெருக்கடி உட்பட பரஸ்பர அக்கறை கொண்ட பல விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். மேலும் பதட்டங்களைக் குறைப்பதற்கும் அரசாங்க தீர்வை எட்டுவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு துறை அமைச்சகம் திங்களன்று, இந்த பயணத்தின் மூலம், “இராணுவ அதிகரிப்பைக் குறைப்பதற்கும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அடைய அரசியல் தீர்வை எட்டுவதற்கும் சாதகமான முடிவுகளை அடைய முயல்கிறது” என்று தெரிவித்ததாக அரசு நிறுவனமான Wam தெரிவித்திருந்தது.
உக்ரைனில் உள்ள நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் கண்டறிவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அமீரகத்தின் தயார்நிலையை அமைச்சகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.