ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்டுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு எமிரேட்டிலும் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உம் அல் குவைன் ஜனவரி 1, 2023 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 1க்குப் பிறகு உம் அல் குவைனின் எமிரேட் நிர்வாகக் குழுவின் முடிவின்படி, அனைத்து பைகளும் மக்கும், பல பயன்பாடு அல்லது காகிதம் அல்லது துணியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உம் அல் குவைன் முனிசிபாலிட்டியானது இந்த புதிய கொள்கையை செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பையினை வாங்கும் நபர்களுக்கு விற்பனை நிலையங்கள் 25 ஃபில்ஸ் கூடுதலாக வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உம் அல் குவைனில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு முழு தடை விதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடுகளினை குறைப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விருப்பங்களுக்கு மாறுவதற்கும் நுகர்வோரை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் இந்த விதி மாற்றமும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று அபுதாபியில், ஜூன் 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் துபாயில் ஜூலை 1 முதல், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பைக்கு 25 ஃபில்ஸ் வசூலிக்கின்றனர். மேலும், துபாயில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் ஒரு மாதத்திற்குள் இதுபோன்ற பைகளின் பயன்பாட்டில் 40 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.