கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி வந்த முன்னணி சுகாதார வீரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் விளைவாக அவர் பூரண குணமடைய கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலான காலம் தேவைப்பட்டுள்ளது. அபுதாபியின் LLH மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அருண்குமார் எம்.நாயர் என்பவர் நீண்ட நாட்களாக கொரோனாவில் பாதிக்கப்பட்டு 15 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பணிக்கு திரும்பிய அவரை சக ஊழியர்கள் வரவேற்று கொண்டாடி தீர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், புர்ஜீல் ஹோல்டிங்ஸில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்த முன்னணி சுகாதாரத்துறை ஊழியரான நாயர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அவரது நுரையீரலில் பாதிப்பு, இதயத் தடுப்பு என மூச்சு விட முடியாமல் ஆறு மாதங்கள் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
இருப்பினும், அவர் முழு ஆரோக்கியமான உடல் தகுதியுடன் இருக்க மேலும் ஒன்பது மாதங்கள் ஆனதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்கு எதிராக கிட்டத்தட்ட 450 நாட்கள் போராடிய பின் தற்பொழுது பணிக்கு இவர் மீண்டும் திரும்பியுள்ளார்.
இது குறித்து புர்ஜீல் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சுனில் கூறுகையில் “கொரோனாவிற்கு எதிராக துணிச்சலுடன் போராடி குறிப்பிடத்தக்க வகையில் மீண்டு வந்த எங்கள் முன்னணி வீரரான அருண்குமார் நாயரை மீண்டும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவர் விரைவில் வேலைக்குத் திரும்புவார் என்று நம்பிய நிலையில், அவர் முழுமையான ஆரோக்கியத்ததை பெற நீண்ட நாட்கள் ஆனதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்ததாகவும், தேவைப்படும் போதெல்லாம் அவருக்கு மருத்துவ உதவியை அணுக நிறுவனம் வசதியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நாயர் கூறுகையில் “நான் நல்ல நிலையில் இல்லை. அடிப்படை தினசரி நடவடிக்கைகள் மேற்கொள்ளவே சவாலாக இருந்தது. முதல் 2 முதல் 3 மாதங்களில் தனியாக கழிவறைக்கு செல்வது கூட கடினமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் என் மனைவி ஜென்னியிடம் இருந்துதான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. மேலும் நான் ஆக்ஸிஜன் உதவியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, சொந்தமாக விஷயங்களைச் செய்ய ஆரம்பித்து சில மாதங்கள்தான் ஆகிறது” என கூறியுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ஒரு மருத்துவர் தெரிவிக்கையில் “கடந்த சில மாதங்களில் அவர் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பாதிப்புள்ளவரை குணப்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் அவர் கொரோனா பாதிப்பிற்கான முந்தைய உடல்நிலையை மீண்டும் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
நாயர் இது பற்றி கூறுகையில் “எனது உடல்நல முன்னேற்றத்திற்கு என்னை ஊக்குவித்த மருத்துவ நிர்வாகத்திடமிருந்து நான் சிறந்த ஆதரவைப் பெற்றேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவுடனும் ஊக்கத்துடனும் இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன். அவர்கள் மிகவும் கரிசனையுடன் இருந்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, அவரது சக ஊழியர்கள் மருத்துவமனையில் ஒன்று கூடி அவருக்காக விழா நடத்தியுள்ளனர். மருத்துவமனை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், புர்ஜீல் ஹோல்டிங்ஸ் நிர்வாகம் அவருக்கு 5,000,000 இந்திய ரூபாயை வெகுமதியாக வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
நாயர் தொடர்ந்து கூறுகையில் அவர் சந்தித்த இக்கட்டான தருணங்களில் நர்ஸாக பணிபுரியும் அவரது மனைவி ஜென்னி தனக்கு மிகுந்த ஆதரவு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் “கடந்த சில மாதங்களாக மனதளவில் கடினமான அனுபவத்தை எதிர்கொண்டேன். ஆனால் எனது அனைத்து கடமைகளையும் மீண்டும் செய்ய ஆர்வமாக உள்ளேன். அதே ஆர்வத்துடன் நான் மீண்டும் பணியாற்றுகிறேன், மேலும் எனது சிறந்த முயற்சியை வழங்குகிறேன்” என்றும் நாயர் கூறியுள்ளார்.