ADVERTISEMENT

பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியின் “Roof Walk”… ஒட்டு மொத்த யாஸ் ஐலேண்டையும் ஒரே நேரத்தில் காணலாம்..

Published: 27 Oct 2022, 11:51 AM |
Updated: 27 Oct 2022, 1:35 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை கால வெயிலின் தாக்கம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதையொட்டி அமீரகம் முழுவதிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சாகசங்களை விரும்பும் நபர்களுக்காகவே பிரத்யேகமாக ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியின் (Ferrary World Abudhabi) உச்சியில் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “Roof Walk”  தற்பொழுது மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் யாஸ் ஐலேண்டில் உள்ள ஃபெரரி வேர்ல்ட் அபுதாபியானது உலக மக்களிடையே குறிப்பாக கார் மற்றும் சாகசங்களில் மீது ஆர்வம் உள்ள அனைவருக்கும் பிரசித்தி பெற்ற இடமாகும். சிவப்பு நிறத்தில் வானில் இருந்து பார்ப்பதற்கு ஒரு அழகிய தோற்றமுடைய இந்த ஃபெரரி வேர்ல்ட் அபுதாபியில் பார்வையாளர்கள் ஃபெரரி நிறுவனத்தின் கார்களை கண்டு களிக்கலாம். அத்துடன் இந்த ஃபெரரி வேர்ல்ட் அபுதாபி தீம் பார்க்கில் பார்வையாளர்களுக்காக ரோலர் கோஸ்டர் உட்பட சில சாகச விளையாட்டுகளும் உள்ளன.

யாஸ் தீவில் அமைந்திருக்கும் இந்த தீம் பார்க்கின் மேற்கூரையானது ஃபெராரியின் குதிரை சின்னத்துடன் 200,000 சதுர மீட்டர் அளவில் பறந்து விரிந்திருக்கும் என்பதும், மேலும் இது விண்ணில் இருந்து தெரியக்கூடிய ஐக்கிய அரபு அமீரக அடையாள சின்னங்களில் ஒன்றாகும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

ADVERTISEMENT

அதில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக “Roof Walk” எனப்படும் சாகச நிகழ்வானது பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதில் பார்வையாளர்கள் கட்டிடத்தின் உச்சியில் உள்ள சிவப்பு நிற கூரைக்கு மேலே நடந்து கொண்டே யாஸ் ஐலேண்டின் அழகியல் தோற்றத்தை கண்டு களிக்கலாம். தற்பொழுது அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்ததையடுத்து இந்த சாகச அனுபவத்தை பார்வையாளர்கள் இனி மீண்டும் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 2 ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் இதனை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் புதன் முதல் ஞாயிறு வரை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த “Roof Walk” மேற்கொள்ள பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் இதற்காக 195 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பார்க்கின் நுழைவு டிக்கெட் கொண்ட நபர்கள் 125 திர்ஹம்ஸ் செலுத்தி இந்த அனுபவத்தை பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் டைமண்ட் மற்றும் கோல்ட் பாஸ் வைத்திருப்பவர்கள் 25 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்றும், சில்வர் பாஸ் வைத்திருப்பவர்கள் 15 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 க்கும் மேற்பட்ட ரைடுகள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி அனைத்து வயதினருக்கும் உலகத் தரம் வாய்ந்த மற்றும் மறக்க முடியாத சாகசங்களைத் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.