ADVERTISEMENT

UAE: சுகாதார, பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக சூப்பர்மார்க்கெட்டை மூட உத்தரவிட்ட அதிகாரிகள்..!!

Published: 4 Nov 2022, 6:04 PM |
Updated: 4 Nov 2022, 6:07 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் அபுதாபியில் செயல்பட்டு வந்த ஒரு சூப்பர்மார்க்கெட்டை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியதன் காரணத்திற்காக அதிரடியாக மூட உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (Abu Dhabi Agriculture and Food Safety Authority-Adafsa) ஒரு அறிக்கையில், அபுதாபியில் நஜ்தா ஸ்ட்ரீட் என்று பிரபலமாக அறியப்படும் சையத் பின் அகமது அல் ஓதைபா ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபலமான அல் தனா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள Jafco சூப்பர்மார்க்கெட்டின் கிளையை மூட உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த  பல எச்சரிக்கைகள் இந்த கடைக்கு அதிகாரிகள் விடுத்திருந்தபோதிலும் பாதுகாப்பு மீறல்களை சரிசெய்வதில் விற்பனை நிலையம் தவறியதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த விதி மீறலில் பூச்சி தாக்குதல்கள் மற்றும் கடையில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் மற்றும் புதிய உணவு பொருட்களை காட்சிபடுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் மோசமான சுகாதாரம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இறைச்சி மற்றும் மீன் போன்ற மூல உணவுகள் பாதுகாப்பற்ற நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர் என கூறப்பட்டுள்ளது. இந்த சூப்பர்மார்க்கெட் மூடுவதற்கு உத்தரவிடுவதற்கு முன்னரே, ADAFSA இந்த கடைக்கு நான்கு எச்சரிக்கைகளை வழங்கியதாகவும் இந்த விதி மீறல்களை சரி செய்யாவிட்டால் கடையை மூடுவோம் என்றும் எச்சரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்படி எச்சரித்தும் போதுமான நடவடிக்கைகளை எடுக்காததால் கடையை மூட உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார மீறல்கள் போதுமான அளவு சரி செய்யப்படும் வரை விற்பனை நிலையம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று ஆணையம் உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் அபுதாபி எமிரேட்டில் உணவு தயாரிக்கும் கடைகளில் வழக்கமான ஆய்வுகளை நடத்துகிறது. அதில் விதிமீறல்கள் புரிந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவற்றைத் தீர்க்க விற்பனை நிலையங்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் இவை சரி செய்யப்படாவிட்டால், உணவுப் பாதுகாப்பு தொடர்பான எமிரேட்டின் 2008 ஆம் ஆண்டின் 2 ஆம் எண் சட்டத்தின் அடிப்படையில், இந்த விற்பனை நிலையத்தை நிர்வாக ரீதியாக மூடுவதற்கு ஆணையம் உத்தரவிடலாம்.

அபுதாபியில் அதிகாரிகள் மேற்கொள்ளப்படும் கடுமையான சோதனைகள் மற்றும் விதிமுறைகள் அபுதாபி முழுவதும் உள்ள நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்துடன் விதிமீறல்களைப் புகாரளிக்க அபுதாபி அரசாங்கத் தொடர்பு மையத்தை 800555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உணவுப் பாதுகாப்பு மீறல்களைப் புகாரளிக்குமாறு குடியிருப்பாளர்களை Adafsa கேட்டுக்கொண்டுள்ளது.