துபாய் டவுன்டவுனில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடமானது துபாயின் முக்கிய டெவலப்பரான Emaar-ன் 8 பவுல்வர்டு வாக் எனப்படும் டவர் காம்ப்ளக்ஸின் ஒரு பகுதியாகும்.
35 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 35 மாடிகள் முழுவதும் தீ பரவியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தினால் கட்டிட முகப்பின் பெரும்பகுதி கருகிய நிலையில், விடியற்காலையில் தீயணைப்பு வீரர்களால் தீ அணைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு எதிரே உள்ள கட்டிடத்தில் வசிக்கும் பிந்து ராய் என்பவர் கூறுகையில், இந்த கட்டிடத்தில் அதிகாலை 2.20 மணியளவில் தீப்பிடித்ததாக கூறியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் தீயை அணைக்க விரைந்து செயல்பட்டதாகவும் அதிகாலை 3.45 மணியளவில் இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.