ஐக்கிய நாடுகள் சபையின் (UN) காலநிலை உச்சி மாநாடுகளில் உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டு அதற்கான திட்டங்கள் கலந்துரையாடப்படும். இதற்கு COP “கட்சிகளின் மாநாடு (Conference Of the Parties)” என பெயரிடப்பட்டுள்ளது. 1992 இல் ஐநா காலநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும். அது மட்டுமல்லாமல் இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.
இதில் COP27 எனப்படும் 27வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நவம்பர் 6 முதல் 18 நவம்பர் 2022 வரை எகிப்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல உலக தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதனடிப்படையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய அரபு அமீரக தலைவர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் திங்களன்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றினார்.
அதில் உலகம் தேவைப்படும் வரை ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பொறுப்பான எரிசக்தி வழங்குனராகக் கருதப்படுகிறது. மேலும் உலகிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைப்படும் வரை அமீரகம் தொடர்ந்து இவற்றை வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதே இந்த நாடுகளில் இருக்கும் எண்ணெய் வளங்கள் தான். உலகளவில் எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமீரக அதிபர் இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள COP28 மாநாடு துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.