ADVERTISEMENT

கத்தாரில் பிரம்மாண்டமாக துவங்கவுள்ள FIFA உலக கோப்பை..!! வளைகுடாவின் பெருமை என அமீரக பிரதமர் பாராட்டு..!!

Published: 20 Nov 2022, 9:09 AM |
Updated: 20 Nov 2022, 10:25 AM |
Posted By: admin

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று இரவு 7.30 மணிக்கு பிரம்மாண்டமாக அல் பைத் ஸ்டேடியத்தில் (Al Bayt Stadium) துவங்கவுள்ளது. முதல் போட்டியானது கத்தார் மற்றும் ஈகுவேடர் அணிகளுக்கு இடையே இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இன்று துவங்கி  டிசம்பர் 18 வரை நடக்கவிருக்கும் இந்த போட்டிக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கத்தார் அரசு மேற்கொண்டுள்ளது. அரபு நாடுகளில் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதற்காக வேண்டி வருடக்கணக்கில் இதற்குண்டான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டது கத்தார் அரசு. உலகிலேயே முதன்முறையாக சிறிய நாட்டில் ஃபிஃபா உலக கோப்பை போட்டி நடைபெறுவதும் இதுவே முதன்முறையாகும். மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் பொதுவாக நடக்கும் இந்த உலக கோப்பை போட்டியானது கத்தாரில் நிலவும் வெயில் காரணமாக குளிர்காலமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கவுள்ளது.

நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த கால்பந்து போட்டியின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கத்தாரில் இருக்கும் எட்டு மைதானங்களைச் சுற்றியுள்ள தெருக்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் முதல் இரண்டு வாரங்களில் வெளிநாட்டு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகபட்ச எண்ணிக்கையை எட்டும் என்றும் இந்த நேரங்களில் 32 நாடுகளுக்கு போட்டிகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்தை சரிபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் கீழ் நவம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை 20 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றும், ஊழியர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதே போல்  மாணவர்களுக்கு நவம்பர் 18 முதல் டிசம்பர் 22 வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகக் கோப்பை ரசிகர்களுக்கு வசதியான மற்றும் மென்மையான போக்குவரத்து அனுபவத்தை உறுதி செய்வதற்காக கத்தாரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் Mowasalat அதன் சிறப்பு தொழில்நுட்ப குழுக்களை ஒன்றிணைத்துள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் உலக கோப்பை போட்டியின் போது கத்தாரில் சுமார் 4,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 3,000 உலக கோப்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதில் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்துடன் இயங்கும் 800 க்கும் மேற்பட்ட முழு எலக்ட்ரிக் பேருந்துகள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பையின் போது இயக்கப்படும் போக்குவரத்து சேவைகளில் கத்தாரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு போக்குவரத்து சேவை, “பார்க் அண்ட் மூவ்” நிறுத்தங்களுக்கு போக்குவரத்து சேவை, தோஹா மற்றும் முக்கிய குடியிருப்புகளில் இருந்து போக்குவரத்து சேவை ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  அத்துடன் போட்டி நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் ரசிகர்களுக்கு போக்குவரத்தை வழங்கும் வகையில் எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போட்டியை நேரலையில் காண அமீரகத்தில் பல இடங்களில் அதற்குண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தியதற்காக கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் “உலகக் கோப்பையை நடத்துவது கத்தாரின் சாதனை. இது வளைகுடாவின் பெருமை மற்றும் அனைத்து அரேபியர்களுக்கும் ஒரு வரலாற்று மைல்கல்” என்றும் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையைக் காண சுமார் 1.2 மில்லியன் பார்வையாளர்கள் கத்தாருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் 29 நாட்களில் 32 அணிகள் பங்கேற்கும் என்றும் மொத்தம் 64 போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோஹாவில் நடைபெறும், போட்டியின் போது பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.