ஷார்ஜாவின் தொழில்துறை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருக்கும் தொழில்துறை பகுதி 6ல் அமைந்துள்ள உதிரி பாகங்கள் கிடங்கு ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தின் காரணமாக கிடங்கில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தீவிபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஷார்ஜா சிவில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக செயல்பாட்டு அறைக்கு காலை 7.15 மணிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தகவல் கிடைத்தவுடன் அல் மினா மற்றும் சாம்னான் மையங்களில் இருந்தும் அல் நஹ்தா பகுதியில் இருந்தும் பாதுகாப்பு வாகனங்கள் தேசிய ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்பு குழுக்களின் உதவியுடன் அரை மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த கிடங்கில் குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.