ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற முக்கிய குடும்ப விஷயங்களை உள்ளடக்கிய நிகழ்வுகளில் புதிய சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்பட்ட அந்தஸ்து குறித்த கூட்டாட்சி-ஆணை சட்டமானது பிப்ரவரி 1, 2023 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபெடரல் தனிநபர் அந்தஸ்து சட்டம் திருமண நிலைமைகள் மற்றும் நீதிமன்றங்களில் திருமண ஒப்பந்தம் மற்றும் ஆவணப்படுத்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் என்றும் கூட்டாக அல்லது ஒருதலைப்பட்சமாக தொடங்கக்கூடிய விவாகரத்து நடைமுறைகளையும் இது ஒழுங்குபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது விவாகரத்துக்குப் பிறகு நிதி உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளையும், குழந்தைகளுக்கான கூட்டு பாதுகாவலின் ஏற்பாட்டையும் ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இந்த சட்டம் பரம்பரை, உயில்கள் மற்றும் தந்தைவழி சான்றுகளுக்கான நடைமுறைகளை ஒழுங்கமைக்கிறது.
இந்த சட்டச் சீர்திருத்தங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டமியற்றும் முறையை மேம்படுத்துவதற்கும், சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப அமீரகத்தை நிலைநிறுத்துவதற்கும் ஏற்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அல் ரோவாட் அட்வகேட்ஸைச் சேர்ந்த சட்ட நிபுணர் டாக்டர் ஹசன் எல்ஹாய்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து முஸ்லிமல்லாத வெளிநாட்டவர்களுக்கும், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தாத வரை, இந்த புதிய சட்டம் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நீதிமன்றத்தில் பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்கு சமமாக இருக்கும், மற்றும் அவர்களின் பரம்பரை, விவாகரத்து மற்றும் விவாகரத்து பெற்ற கணவன் மனைவி இருவரின் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை கூட்டு பாதுகாவலில் சமமான உரிமைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்து செய்யும் பட்சத்தில் தங்கள் பெற்றோரை தேர்வு செய்யும் உரிமை குழந்தைகளுக்கு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை பாதுகாப்பு குறித்து விவரிக்கையில், இரண்டு பெற்றோர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கைகளை தாக்கல் செய்ய முடியும், குழந்தைக்கு எது சிறந்தது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும், இதற்கு வாழ்க்கைத் துணைவர்கள் குறைந்தது 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “புதிய சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தினால் ஏதேனும் தீங்கும் ஏற்பட்டது என்பதை நிரூபிக்காமலும் அவர்கள் விவாகரத்து கோரலாம்” எனவும் கூறியுள்ளார்.