சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சவூதி வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த பலத்த மழை முன்னறிவிப்பு காரணமாக சவூதியின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படடுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக சவூதியில் அடுத்த சில நாட்களுக்கு வெள்ளம் ஏற்படும் என்றும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள தேசிய வானிலை மையம் (NCM) ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வியாழன் வரை ஜித்தா, ரபீக், தைஃப், ஜமும், அல் காமில், குலைஸ், அல் லைத், அல் குன்ஃபுதா, அல் அர்தியத், ஆதம், மேசன் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் உள்ள காணொளிகள், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்கள் ஓடுவதையும், நாட்டின் பிற பகுதிகளில் மழை பெய்வதையும் காட்டுகிறது.
#VIDEO: North of #Jeddah witnessing heavy rain, as the local authorities say residents should expect more rain in the upcoming hours — https://t.co/x2b18eWJfW pic.twitter.com/ItHhfEH8XG
— Saudi Gazette (@Saudi_Gazette) December 11, 2022
சவூதி அரேபியாவின் குடிமைத் தற்காப்புப் பிரிவானது, வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் கார்களின் படங்களையும், இந்த மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பகிர்ந்துள்ளது.
மதீனா (அல் மஹ்த், வாதி அல் ஃபரா, அல் ஹனக்கியா), வடக்கு எல்லை (ரஃப்ஹா), ஹைல் (ஹைல், பக்கா, அல் கசாலா, அல் ஷன்னன் மற்றும் பெரும்பாலான கவர்னரேட்டுகள்) உள்ளிட்ட பகுதிகளில் திங்கள் முதல் அடுத்த வியாழன் வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பொழியும் என கூறியுள்ள வானிலை மையம் இவ்வாறான காலநிலையில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அனைவரும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
நீரோட்டங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களிலிருந்து மக்களை விலகி இருக்குமாறு எச்சரித்த ஆணையம், அவற்றைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் மற்றும் NCM மூலம் வானிலை தகவல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.