துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏவியேஷன் பிசினஸ் விருதுகள் 2022 எனும் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) ‘ஆண்டின் சிறந்த விமான நிலையம்’ என்ற விருதை வென்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
கடந்த 12 மாதங்களில் “நிகரற்ற செயல்திறன்” அடிப்படையில் இந்த பிரிவில் துபாய் சர்வதேச விமான நிலையம் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 28 மில்லியன் பயணிகளை துபாய் விமான நிலையம் எதிர்கொண்டதாகவும் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒப்பிடுகையில் ஏறக்குறைய மூன்று மடங்கு பயணிகளை கூடுதலாக எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையமானது தனது சேவைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதோடு, அதன் அனைத்து இலக்கு பகுதிகளிலும் விருந்தினர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்கிறது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிக்கும் ஒரு முக்கிய விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.