ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் தங்களின் விசா காலத்தை புதுப்பித்துக்கொள்ள விரும்பினால், அவர்கள் கட்டாயம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், நாட்டிற்குள்ளே புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறை நிறுத்தப்படுவதாகவும் அமீரக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
அமீரக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அமீரகத்திற்கு விசிட் விசாவில் வந்த வெளிநாட்டவர்கள் பலரும் தங்களது விசா காலத்தை புதுப்பித்துக்கொள்ள வசதியாக அமீரகத்தில் இயங்கி வரும் டிராவல் நிறுவனங்கள் பலவும் பல்வேறு பேக்கேஜுகளை அறிவித்துள்ளனர். அது பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம்.
பஸ் பயணமாக விசாவை மாற்றிக்கொள்ளுதல்:
அமீரகத்திலிருந்து பஸ் பயணமாக ஓமான் நாட்டிற்கு பயணம் செய்ய Dh599 முதல் டிராவல் பேக்கேஜ் வழங்குவதாக அஜ்வா டூர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 30 நாள் விசாவிற்கு 599 திர்ஹம்ஸ் எனவும், 60 நாள் விசாவிற்கு 799 திர்ஹம்ஸ் எனவும் விசா புதுப்பித்துக் கொள்வதற்கான பேக்கேஜை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதே போன்று ஆன்லைன் பயண நிறுவனம் Musafir.com, பஸ் மூலம் விசாவை மாற்றிக்கொள்ள 799 திர்ஹம்ஸ் பேக்கேஜை வழங்குகிறது. மற்றொரு டிராவல் நிறுவனம் அனிஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஓமானுக்கு பஸ் மூலம் நாட்டை விட்டு வெளியேறி விசாவை புதுப்பித்துக்கொள்ள 850 திர்ஹம்ஸை நிர்ணயித்துள்ளது. மேலும் இந்த சேவையை தற்போது அவசரமாக வெளியேற வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் கூறியுள்ளது.
விமான பயணமாக விசாவை மாற்றிக்கொள்ளுதல்:
அமீரகத்தை விட்டு விமான பயணமாக விசாவை மாற்றிக்கொள்ள 999 திர்ஹம்சிலிருந்து 1,999 திர்ஹம்ஸ் வரை செலவாகும் என அமீரகத்தில் உள்ள விமான நிறுவனங்கள் கூறியுள்ளன. இதில் குறைந்தபட்சமாக அஜ்வா டூர்ஸ் நிறுவனம் 30 நாள் விசாவிற்கு 999 திர்ஹம்ஸ் கட்டணத்தையும், 60 நாள் விசாவிற்கு 1,999 திர்ஹம்ஸ் கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.
அதே போன்று ஆன்லைன் பயண நிறுவனம் Musafir.com விமான பயணம் வழியாக விசாவை புதுப்பித்துக்கொள்ளும் சேவை 1,100 திர்ஹம்சிலிருந்து தொடங்குவதாக தெரிவித்துள்ளது. அனிஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸை பொறுத்தவரை இந்த சேவை 1,250 திர்ஹம்சிலிருந்து தொடங்குகிறது.
துபாயை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனம், ஃப்ளைதுபாய் விமானம் வழியாக விசா புதுப்பித்தலுக்கு 1,050 திர்ஹம்ஸ் கட்டணத்தை 30 நாள் விசாவிற்கும், மற்றும் Dh1,300 திர்ஹம்ஸை 60 நாள் விசாவிற்கும் பேக்கேஜாக வழங்குகிறது.
அமீரகத்திற்கு உள்ளேயே விசாவை மாற்றிக்கொள்ளுதல்:
அமீரகத்தில் தற்போது துபாயில் மட்டும் இன்னும் சில நாட்களுக்கு உள்நாட்டிற்குள்ளேயே விசா புதுப்பித்துக்கொள்ளும் வசதி அமலில் இருக்கும் என்றும், விரைவில் இந்த சேவை நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது துபாயில் விசிட் விசாவை புதுப்பித்துக்கொள்ளும் வசதியை, Musafir.com 1,800 திர்ஹம்களுக்கு வழங்குகிறது. அதேபோன்று அனிஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையை 2,200 திர்ஹம்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.