துபாயில் இருக்கக்கூடிய கிராண்ட் ஹயாத் துபாய் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை, டிசம்பர் 17 அன்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) தனித்துவமான பிளேட் நம்பர் (vehicle plate numbers) என சொல்லக்கூடிய வாகன எண் தகடுகளுக்கான 111வது ஏலத்தை நடத்தியது. இந்த ஏலத்தில் கிட்டத்தட்ட 30.8 மில்லியன் திர்ஹம்களை RTA திரட்டியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் முதலிடம் பிடித்தது O 36 என்ற எண்ணாகும். இது 2.64 மில்லியன் திர்ஹம்ஸிற்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து U 66666, 1.46 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் Z 786 1.035 மில்லியன் திர்ஹம்ஸிற்கும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு தனித்துவ எண்ணான V 44444 ஒரு மில்லியன் திர்ஹமிற்கு விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இலக்கங்களைக் கொண்ட இந்த ஏலத்தில், H,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y மற்றும் Z ஆகிய எழுத்துக்களைத் தாங்கிய 90 ஃபேன்ஸி வாகன எண்களை இந்த ஏலத்தில் எடுக்க RTA வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஃபேன்ஸி எண்களுக்கான ஏலங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு குறிப்பிட்ட எண்கள் மில்லியன் கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.