ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த பலரும் வசித்து வரும் நிலையில், தங்கும் இடங்களில் விதிகளுக்கு புறம்பாக அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தங்கியிருப்பதற்கு எதிராக புதிய பிரச்சாரம் ஒன்றை அபுதாபி அறிவித்துள்ளது.
அபுதாபியின் முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினால் (TMT) ‘உங்கள் வீடு, உங்கள் பொறுப்பு’ என்ற தலைப்பில் நேற்று வியாழன் அன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம். குடியிருப்புப் பகுதிகளில் கூட்ட நெரிசலை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி சிவில் டிஃபென்ஸ் ஆணையத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம், அபுதாபி எமிரேட்டில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், கூட்ட நெரிசலின் பாதகமான விளைவுகளிலிருந்து சமூக உறுப்பினர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது எனவும் அபுதாபி முனிசிபாலிடி கூறியுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு 2023-ன் முதல் காலாண்டில் இந்த ஆய்வுப் பிரச்சாரம் தொடங்கவிருப்பதாகவும், அனைத்து குடிமக்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் வணிகங்கள், சட்ட விதிகளை பின்பற்றி தங்களின் குடியிருப்பு கட்டிடங்களில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறும், விதிகளை மீறிய குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளருக்கு 1 மில்லியன் திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அபுதாபி முனிசிபாலிடி எச்சரித்துள்ளது.
இது தவிர, கூட்ட நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புச் சட்டத்தின் பிற விதி மீறல்கள் போன்றவற்றைப் புகாரளிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள், 800555 என்ற எண்ணிற்கு அழைத்து அபுதாபி முனிசிபாலிடி துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் 2019 ஆம் ஆண்டின் குடியிருப்பு தொடர்பான சட்டம் எண் 8 ன் படி, ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தங்கியிருக்கும் நபர்களின் எண்ணிக்கையானது, அதன் பரப்பளவு மற்றும் அந்த கட்டிடத்தில் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அது கூட்ட நெரிசலாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.