ADVERTISEMENT

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்..!! ஓமானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

Published: 27 Dec 2022, 6:17 PM |
Updated: 27 Dec 2022, 6:21 PM |
Posted By: admin

கடந்த சில நாட்களாக வளைகுடா நாடுகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று ஓமானில் இருக்கக்கூடிய பல பகுதிகளிலும் கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மஸ்கட்டில் பெய்த கனமழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கியதாகவும், இதனால் தனியார் மற்றும் வணிக நிறுவனங்களின் பொருட்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை மஸ்கட்டில் 72 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களை அந்தந்த கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் பொது மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “சாலைகள் மற்றும் பாலங்கள் இந்த நேரத்தில் மிகவும் ஆபத்தானவை. அதனால் மக்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்” என்று மஸ்கட்டில் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ஒரு காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

ஓமானில் பெய்த கனமழை காரணமாக சீப் விலாயத்தில் உள்ள ஒரு தொழிலாளர் முகாமின் சுவர் இடிந்து விழுந்து ஒரு சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும் கனமழை காரணமாக சிலர் தங்கள் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஓமானில் உள்ள குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் மக்களைப் பற்றி தொடர்ந்து புகார்களை பெற்றதாக ஓமான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்புக் குழுக்கள் அயராது உழைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் இக்குழுவானது 51 பேரை இதுவரை வெள்ளத்தில் இருந்து மீட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT