உலகின் சில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது இந்தியா. அதில் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சீரற்ற முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறவிக்கப்பட்டு இந்திய விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளில் 2% பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பயணிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வந்தடைந்த இந்த பயணிகள் இருவரும் புதுக்கோட்டையில் இருக்கும் ஆலங்குடியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றின் வகையை சோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இரு பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பாதித்த கொரோனா வகை எது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர்களில் 39 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதார நல அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.