அமீரகம் முழுவதும் புத்தாண்டு மிக சிறப்பான முறையில் கொண்டாட்டப்பட்ட நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அபுதாபியின் ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் நடைபெற்ற கொண்டாட்டமானது நான்கு கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருக்கக்கூடிய அல் வத்பாவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாகவும் 40 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த அற்புதமான வானவேடிக்கையானது மூன்று உலக சாதனைகளை முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 3,000 ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ட்ரோன் ஷோவும் உலக சாதனையை படைத்து மொத்தமாக 4 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளது அபுதாபி.
இந்த கொண்டாட்டம் ஆரம்பித்த போது 2023 கவுண்ட்டவுனை காட்சிப்படுத்தும் ட்ரோன் ஷோ நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் புத்தாண்டிற்கான சிறப்பு வான வேடிக்கைகளும் ஆரம்பமாகின. கண்கவர் ட்ரோன்கள் ஒன்றிணைந்து பல பெரிய செய்திகளையும் வடிவங்களையும் உருவாக்கியது.
‘‘Hayakum’, ‘World’s Coolest Winter’, ‘Hello Future’, ‘2022-2071’, Rashid rover போன்ற பல்வேறு வண்ணங்களில் ட்ரோனை காட்சிப்படுத்திய நிலையில் மிகப்பெரிய ட்ரோன் QR குறியீட்டையும் உருவாக்கி இதன் மூலம் ஏற்கனவே இருந்த உலக சாதனையும் முறியடிக்கப்பட்டது.
அத்துடன் அளவு, உருவாக்கம் மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் 40 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற வானவேடிக்கைகளானது மூன்று சாதனைகளை முறியடித்தன.
இந்நிகழ்வு நடைபெறும் சமயங்களில் இவ்வாறு நான்கு சாதனைகளையும் முறியடிப்பதில் அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது ஒரு பரபரப்பான செயல்முறையாகும் என்று கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ நடுவர் அல்வலீத் உஸ்மான் கூறியுள்ளார். அவர் கூறுகையில் “நான் ட்ரோன் தளத்தில் இருந்தேன். அனைத்து ட்ரோன்களும் சரியாக ஏவப்பட்டதா என்பதை நான் சரிபார்க்க வேண்டியிருந்தது. அத்துடன் ட்ரோன்கள் உருவாக்கிய QR குறியீட்டை கேமரா ஃபோன் மூலம் படிக்க முடியுமா என்பதைப் பார்க்க விரைந்து செல்ல வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
வான வேடிக்கை தொடங்கியதும், அவர் வானவேடிக்கை கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று நடவடிக்கைகளைப் பின்பற்றியதாகவும் பின்னர் மூன்று சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த மெதுவான இயக்கத்தில் வீடியோ காட்சிகளை மதிப்பாய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒளிரும் வானவேடிக்கைகள், ட்ரோன் மற்றும் லேசர் ஷோ ஆகியவை இந்த ஃபெஸ்டிவலுக்கு வந்த பார்வையாளர்களுக்கு கண்கவர் விருந்தாக அமைந்திருந்தது. அல் வத்பாவில் நடைபெற்று வரும் இந்த ஷேக் சையத் ஃபெஸ்டிவலானது வரும் மார்ச் 18 வரை நடைபெறும். இதற்கான பார்வையார்கள் நுழைவு கட்டணம் 5 திர்ஹம் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.