ADVERTISEMENT

UAE: சாலையின் நடுவே வாகனம் திடீரென நின்றால் என்ன செய்வது..??

Published: 3 Jan 2023, 8:21 PM |
Updated: 3 Jan 2023, 8:23 PM |
Posted By: admin

வாகனங்களை ஓட்டுபவர்கள் எவ்வளவுதான் கவனத்துடன் இருந்தாலும் ஒரு சில சமயங்களில் வாகனத்தில் ஏதாவது கோளாறு காரணமாகவோ அல்லது பெட்ரோல் காலியாகிவிட்டாலோ திடீரென வாகனம் நிற்பதற்கு வாய்ப்புண்டு. அதிலும் போக்குவரத்து அதிகமுள்ள அமீரக சாலைகளில் அடுத்தடுத்து வாகனங்கள் வந்த வண்ணமே இருக்கும். இதனால் சாலை விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

ADVERTISEMENT

இப்படி இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விபரங்களை அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளது. அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமையன்று வாகன ஓட்டிகளின் கார் நடுரோட்டில், குறிப்பாக இரவில் பழுதடைந்தால் என்ன செய்வது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

நெடுஞ்சாலையில் திடீரென வாகனத்தை நிறுத்துவது ஆபத்தான போக்குவரத்து விதிமீறலாகும். இது கடுமையான விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான், ஒரு வாகன ஓட்டுநர் பழுதடைந்த காரை சரிசெய்யும் போது சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் எக்காரணம் கொண்டும் சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல்துறையினர் முன்னதாகவே வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூட்டாட்சி போக்குவரத்து சட்டங்கள் இந்த குற்றத்திற்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு ப்ளாக் பாய்ண்ட்ஸ் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறை, சாலையில் கார் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் ஓட்டுநர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஆறு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பட்டியலிட்டுள்ளது. அவை

ADVERTISEMENT

>> உங்கள் வாகனத்தை சாலையில் இருந்து நகர்த்தி, சாலையில் நியமிக்கப்பட்டுள்ள அவசரகாலப் பகுதிகளைப் பயன்படுத்தவும்.

>> நீங்கள் சாலையின் வலது ஓரத்தில் இருக்கும் பகுதியை பயன்படுத்தலாம்.

>> எச்சரிக்கை விளக்குகளை (Hazard Lights) பயன்படுத்துங்கள்.

>> மற்ற ஓட்டுனர்களை எச்சரிக்க வாகனத்தின் பின்னால் ஒரு பிரதிபலிப்பு முக்கோணத்தை (reflective triangle) வைக்கவும்.

>> உங்கள் பாதுகாப்பிற்காக வாகனத்தை விட்டு வெளியேறவும்.

>> உதவி கோருவதற்கு அவசரகால ஹாட்லைன் 999 ஐ அழைக்கவும்.