ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய கன மழை.. நிலையற்ற வானிலை நாளையும் தொடரும் என அதிகாரிகள் தகவல்..!!

Published: 25 Jan 2023, 6:42 PM |
Updated: 25 Jan 2023, 6:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலையற்ற வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டு ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பலத்த மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை குறைந்ததன் காரணமாக, அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில் அபுதாபியில் பலத்த மழையும், துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய இடங்களில் மிதமான மழையும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் அபுதாபியில் உள்ள மதீனத் சையத், அல் ரியாத் மற்றும் ஷார்ஜாவில் உள்ள கத்தாவில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று இரவு 11:30 மணி வரை பல்வேறு இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் “புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், வானிலை நிலையற்றதாக இருக்கும், அடர்ந்த மேகங்கள், மழை, இடி மற்றும் மின்னலுடன் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வியாழன் அன்று நாடு முழுவதும் வெப்பநிலை ஐந்து முதல் ஏழு டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமீரகத்தின் உயரமான மலையான ஜபெல் ஜெய்ஸில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதே போல் அமீரகத்தின் அண்டை நாடான ஓமானில் உள்ள மலைப்பகுதிகளிலும் கடந்த ஒரு சில நாட்களாக பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.