ADVERTISEMENT

அபுதாபி: ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக பல வாடிக்கையாளர்கள் அளித்த புகார்.. உணவகத்தை அதிரடியாக மூட உத்தரவிட்ட அதிகாரிகள்..!!

Published: 1 Feb 2023, 6:34 PM |
Updated: 1 Feb 2023, 8:38 PM |
Posted By: admin

அமீரகத்தில் சுகாதார விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்காத உணவகங்களை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் பல வாடிக்கையாளர்கள் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் அபுதாபியில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தை அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபியில் இருக்கும் பர்கர் அல் அரப் உணவகம் மற்றும் கஃபே பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்படுவதன் காரணமாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) அந்த உணவகத்தை மூடுவதற்கு நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியாவால் மாசுபட்ட வறுக்கப்பட்ட சிக்கன் உணவை வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதால், ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஆணையம் இந்த உணவகத்தை மூடியுள்ளது. மேலும் உணவை சேமித்தல், கையாளுதல் மற்றும் தயாரித்தல் ஆகியவற்றில் இந்த உணவகம் சரியான நடைமுறைகளை கடைபிடிக்காததால் உணவுகள் வீணானதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் உணவு தயாரிக்கும் போது உணவகம் சுகாதாரத்தை பராமரிக்க தவறியதாகவும், உணவு சேமிப்பு மோசமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விதிமீறல்கள் சரி செய்யப்படும் வரையிலும் உணவகம் பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான உணவு பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வரையிலும் உணவகத்தை மூடுவதற்கான உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் உணவு-பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து உணவு நிறுவனங்களும் ஆணையத்தின் ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்று ADAFSA  தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் உணவகங்களில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் குறித்து சந்தேகம் இருந்தால், அபுதாபி அரசின் கட்டணமில்லா எண்ணான 800555க்கு புகார் தெரிவிக்குமாறும் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கப்படும் புகார்களின் அடிப்படையில் அந்த உணவகங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.