ADVERTISEMENT

UAE: காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர், சந்தா செலுத்தாதவர் புதிய வேலையில் சேர முடியாது.. விதிகளை கடுமையாக்கிய அரசு..!!

Published: 12 Feb 2023, 11:48 AM |
Updated: 12 Feb 2023, 11:50 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அமீரக அரசு கட்டாயமாக்கியது. மேலும் இந்த திட்டத்தில் இணைவதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்து, காப்பீட்டு திட்டத்தில் இணையாத ஊழியர்கள் மீது ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

எனவே இந்த அபராதங்களைத் தவிர்க்க, ஜூன் 30-ம் தேதிக்கு முன் கால தாமதம் செய்யாது இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமாகும். அதுமட்டுமல்லாமல் ஏதேனும் அபராதம் செலுத்த வேண்டியிருந்து தேவையான காலக்கெடுவுக்குள் அவற்றைச் செலுத்தாதது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MOHRE) அறிவிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் தண்டனைகளின்படி உங்கள் வேலை வாய்ப்புகளையும் பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

கட்டாய வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

அமீரகத்தின் வேலையின்மை காப்பீட்டுத் திட்டம், தன்னிச்சையான வேலைவாய்ப்பு இழப்பு (Involuntary Loss of Employment-ILOE) என்றும் அறியப்படுகிறது. இது ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் நீங்கள் அதிகாரப்பூர்வ ILOE போர்டல் – www.iloe.ae மூலம் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

இதுவரை, 250,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மேலும் இது அமீரகத்தில் வேலையை இழந்த தொழிலாளர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வரை நிதி ரீதியாக பயனளிக்கிறது. அதாவது உங்கள் சம்பளத்தைப் பொறுத்து, மூன்று மாத இழப்பீட்டு தொகை பெறுவதற்கான தகுதிபெற, நீங்கள் மாதத்திற்கு 5 அல்லது 10 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும்.

அபராதம் மற்றும் தண்டனை 

ILOE கொள்கைக்கு சந்தா செலுத்தாததற்கும் அல்லது இணங்காததற்கும் அபராதங்கள் மற்றும் தண்டனைகளானது 2022 இன் வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அசைச்சக தீர்மானம் எண். 604 இன் ஆர்டிகிள் 9 மற்றும் 10 இல் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் அவை இரண்டு வகைகளாகும்.

ADVERTISEMENT

1. திட்டத்தில் சேராமல் இருத்தல் : ஜூன் 30-ம் தேதிக்கு பிறகும் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்திற்கு நீங்கள் சேரவில்லை என்றால், 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

2. காப்பீட்டுத் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்தத் தவறுதல் : நீங்கள் சந்தா செலுத்தி திட்டத்தில் சேர்ந்திருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கால இடைவெளிகளில் (மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரம்) பிரீமியத்தை அதாவது சந்தா தொகையை செலுத்தவில்லையெனில், செலுத்தாத தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின், காப்பீட்டு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். 

அபராதம் கட்டாதவர்களுக்கு ஊதியத்தில் இருந்து அபராதம் கழிக்கப்படும் முறை

சந்தா செலுத்தாததற்கும் அல்லது தவணை செலுத்தாததற்கும் விதிக்கப்படும் அபராதங்களை செலுத்தாமல் அதனை புறக்கணித்தால் அதற்கு விதிக்கப்படும் தண்டனைகள் என்ன என்பதையும் அமைச்சர்கள் தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது. தீர்மானத்தின் ஆர்டிகிள் 9 இன் பிரிவு 4 இன் படி, குறிப்பிட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு அபராதம் செலுத்தத் தவறிய ஒரு ஊழியர், ஊதியப் பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலம் அவருக்குக் கிடைக்கும் மாத சம்பளம் அல்லது கிரேஜூட்டி (gratuity) எனும் உழியருக்கு கிடைக்கும் சேவையின் இறுதி ஊதியத்திலிருந்து அபராதத் தொகை கழிக்கப்படும். 

புதிய வேலை அனுமதி இல்லை

ஒருவேளை உங்களின் இந்த அனைத்து அபராதங்களையும் நீங்கள் செலுத்தவில்லை என்றால், அமீரகத்தில் நீங்கள் புதிய வேலை அனுமதி பெறுவதைத் தடுக்கவும் வாய்ப்புண்டு. இது புதிய வேலையில் நீங்கள் சேருவதைத் தடுக்கும்.

தீர்மானத்தின் 10வது பிரிவின்படி, சந்தா செலுத்தாததால் அல்லது ILOE திட்டத்திற்கு இணங்காததால் அபராதம் விதிக்கப்பட்டால் அந்த நபர் புதிய வேலை அனுமதியைப் பெறக்கூடிய தகுதியை இழந்தவர் ஆவார். எனவே அவரால் புதிய வேலைக்கான பெர்மிட் அல்லது விசாவைப் பெற முடியாது.