இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்த வருட ரமலானை கோலாகலமாக கொண்டாட “Hai Ramadan”
எனும் கலாச்சார நிகழ்வை எக்ஸ்போ சிட்டி துபாய் அறிவித்துள்ளது. புனித ரமலான் மாதத்தின் பாரம்பரியங்களை பறைசாற்றும் வண்ணம், மார்ச் 3 முதல் ஏப்ரல் 25 வரை சுவையான உணவுகள், வண்ணமயமான விளக்குகள், கவர்ச்சியான மற்றும் உற்சாகமான செயல்பாடுகளுடன் இந்த கொண்டாட்டங்கள் எக்ஸ்போ நகரம் முழுவதும் நடைபெறும் என்று எக்ஸ்போ சிட்டி துபாய் உறுதியளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரிய கொண்டாட்டமான ஹக் அல் லைலாவுக்கு (Haq Al-Laila) முந்தைய வார இறுதியில் தொடங்கி, 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறவிருக்கும் இந்த ‘Hai Ramadan’ கொண்டாட்டம், ரமலானுக்கு முன்னதாக மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், புனித மாதத்தில் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் நடைபெறும் என எக்ஸ்போ சிட்டி துபாய் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொண்டாட்டம் குறித்து எக்ஸ்போ சிட்டி துபாயின் நிர்வாக கிரியேட்டிவ் டைரக்டர் அம்னா அபுல்ஹவுல் கூறுகையில், எக்ஸ்போ 2020 துபாய் உலகை ஒருமுறை ஒன்றிணைத்தது போல, இந்த புனித மாதத்தில் எக்ஸ்போ சிட்டி துபாயின் ‘Hai Ramadan’ நிகழ்வானது உலகின் பல்வேறு மக்களை மீண்டும் ஒன்றிணைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட ரமலான் கொண்டாட்டங்களை பார்வையாளர்கள் ஒரே இடத்தில் கண்டு மகிழ்ச்சியடைய முடியும் என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கொண்டாட்டம் பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு கலாச்சார பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அங்கு அவர்கள் இஸ்லாமிய உலகம் முழுவதிலும் இருந்து தனித்துவமான அனுபவங்களைப் பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், சுவையான பிராந்திய உணவுகள் முதல் சர்வதேச உணவுகள் மற்றும் கவர்ச்சியான ஸ்ட்ரீட் உணவுகள் வரை, பலவிதமான சுவை அனுபவங்களைப் பார்வையாளர்கள் பெறமுடியும், இது புனித மாதத்தில் நோன்பு திறப்பது மற்றும் அன்பானவருடன் உணவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல, எக்ஸ்போ சிட்டி துபாயில் கட்டப்பட்டு வரும் பிரத்யேக மசூதியானது, ரமலான் மாதம் முழுவதும் இஷா, தாராவீ மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைகள் உட்பட பிரார்த்தனைகளை நடத்தும் என்றும், தாராவீஹ் தொழுகைக்குப் பிறகு நாட்டுப்புறக் கதைகள், கலாச்சாரம், மதம் மற்றும் ஒழுக்கம் பற்றிய கதைகளை மதபோதகர்கள் விவரிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, அல் வாஸல் ஷோ மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுடன் எக்ஸ்போ சிட்டி துபாயில் நடைபெறவிருக்கும் இந்த ‘Hai Ramadan’ கொண்டாட்டத்திற்கு நுழைவு இலவசம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன், இரவுச் சந்தையில் வாசனை திரவியங்கள், பரிசுகள் மற்றும் ஆடைகள் போன்றவை குடியிருப்பாளர்களுக்காக விற்பனைக்கு இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.