அபுதாபியில் அமைந்துள்ள பவாபத் அல் ஷர்க் மால் ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு ரமலான் கூடாரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் ரமலான் காலங்களில் ஒவ்வொரு நாளும் 100 ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அம்மக்களுக்கு சூடான இஃப்தார் உணவையும் இதன் மூலம் மற்ற சமூக உறுப்பினர்களுடன் ரமலான் உணர்வைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் இது வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவாபத் அல் ஷர்க் மால் எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் அத்தாரிட்டியுடன் இணைந்து பனியாஸில் இப்தார் கூடாரத்திற்கு நிதியுதவி செய்யும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து ரமலான் மாதத்தில் முழு குடும்பத்திற்கும் பல மனதைக் கவரும் நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும் மால் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் ரமலான் காலத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 12 மணி வரையிலும், ஈத் சமயங்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் தனித்துவமான அனுபவங்கள், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இந்த மால் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மால் சிறுவர்களைக் கவர ஒரு பிரத்யேக கிட்ஸ் ஏரியாவையும் அர்ப்பணித்துள்ளது.
அத்துடன் ஒரு சிறப்பு ‘ஷாப் & வின்’ பிரச்சாரத்தையும் இந்த மால் துவங்கவுள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ் மார்ச் 16 முதல் ஏப்ரல் 26, 2023 வரை இந்த மாலில் உள்ள எந்தவொரு கடையிலிருந்தும் 200 திர்ஹம் அல்லது கேரிஃபோரில் (Carrefour) 400 திர்ஹம்ஸிற்கு ஷாப்பிங் செய்யும் நபர்கள் புத்தம் புதிய Audi Q3 க்கான ரேஃபிள் டிராவில் நுழையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரேஃபிள் டிரா முடிவுகள் ஏப்ரல் 27, 2023 அன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.