அமீரக குடியிருப்பாளர்கள் வெகுநாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும், அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கடல்வாழ் தீம் பார்க் எதிர்வரும் மே 23 அன்று திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரம்மாண்டமான அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் பார்க்கலாம், குடும்பத்துடன் நேரத்தை அனுபவிக்க எவ்வாறான விஷயங்கள் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் போன்ற கற்பனை கலந்த ஆவலுடன் பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
மேலும், இங்கு குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில், கடல் சார்ந்த ஏராளமான உயிரினங்களுக்கு நடுவில் பயணிக்கும் ஒரு புதிய அனுபவத்துடன், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் எட்டு விதமான அம்சங்கள் இந்த தீம் பார்க்கில் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், 100 க்கும் மேற்பட்ட விலங்குகள், சாகச சவாரிகள், விதவிதமான உணவு வகைகள், 13 சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
சீவேர்ல்ட் அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள எட்டு பகுதிகள்:
பூமியிலும் கடலிலும் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இடையிலான தொடர்பின் அடிப்படையில், சீவேர்ல்ட் அபுதாபி பார்வையாளர்களை “அதன் ஒருங்கிணைக்கும் ஒரு கடல் கதையின் மூலம்” வெப்பமண்டலங்கள், பசிபிக் வடமேற்கின் பாறை கடற்கரைகள், அரேபிய வளைகுடா, பரந்த கடல் மற்றும் வழியில் அதன் சிறிய சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற எட்டு பகுதிகள் வழியாக பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். அவை,
முதல் பகுதி: ஒரு பெருங்கடல் (One Ocean)
சீவேர்ல்ட் அபுதாபியின் மையத்தில் அமைந்துள்ள இந்த பகுதியானது மற்ற பகுதிகளுக்கு ஒரு இணைப்பாக செயல்படுகிறது. அதிவேக மல்டிமீடியா கதையான ‘One Epic Ocean’ பற்றிய காட்சிகள் இங்கே 360 டிகிரி திரையில் காட்டப்படும். இந்த மண்டலம் விலங்கு பராமரிப்பு மையத்தின் ஒரு முக்கிய அம்சமாகவும் விளங்குகிறது.
இரண்டாம் பகுதி: அபுதாபி பெருங்கடல் (Abudhabi Ocean)
அரேபிய வளைகுடாவின் ஆழமற்ற கரையோரங்களில் பார்வையாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்து குளித்தல் (pearl diving) மற்றும் வர்த்தகம் பற்றி இந்த பகுதியில் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இங்கு விதவிதமான உணவு வகைகளும், சில்லறை விற்பனை நிலையங்களை கொண்ட ஒரு சூக்கும் (souk) இங்கு உள்ளது. மேலும் விலங்குகளுடன் நெருங்கிய சந்திப்புகளையும் இந்த பகுதியில் பார்வையாளர்கள் அனுபவிக்கலாம்.
மூன்று மற்றும் நான்காம் பகுதி: துருவப் பெருங்கடல் (Polar Ocean)
இது அண்டார்டிகாவின் பனிக்கட்டி பிரதேசத்திலிருந்து செழிப்பான உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட ஆர்க்டிக்கின் டன்ட்ராவுக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். வட துருவ வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த மண்டலங்களில், வண்ணமயமான ஜுஹானி வில்லேஜ் மற்றும் அதன் துறைமுகத்தையும் கண்டு மகிழலாம். அதாவது பெங்குவின் மற்றும் வால்ரஸ் போன்ற துருவப் பகுதிகளில் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஏற்றவாறு குளிரான சூழல் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பகுதி: மைக்ரோ ஓஷன் (Micro Ocean)
குடும்பமாக சவாரி செய்வதற்கான ரைடுகள், சிறியவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகள், விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் கலைஞர்கள், சில்லறை விற்பனை நிலையம் போன்றவற்றை உள்ளடக்கிய மைக்ரோ ஓஷன் மண்டலத்தில், பார்வையாளர்கள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படுவார்கள். மேலும் இந்த பகுதியில் பார்வையாளர்கள் கடலின் சிறிய அதிசயங்களை வண்ணங்களின் வெடிப்பு மற்றும் அதிவேக வடிவமைப்பில் ஆராயும் வாய்ப்பையும் பெறுவார்கள்,
ஆறாம் பகுதி: முடிவில்லா பெருங்கடல் (Endless Ocean)
இது உலகின் மிகப்பெரிய அகுவாரியத்தை கொண்டுள்ள பகுதியாகும். இந்த பகுதியில் சுறாக்கள், திருக்கை வகை மீன்கள் (rays) மற்றும் பாம்பு போன்ற விலாங்கு மீன்கள் (eels) உட்பட 68,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களை 20 மீட்டர் அளவிலான ஜன்னல் வழியாக பார்க்கலாம். உலகின் மிகப்பெரிய பல்வகை மீன்களின் அருங்காட்சியகமாக விளங்கும் இந்த மண்டலத்திற்கு பொருத்தமாக ‘Endless Vista’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏழாம் பகுதி: வெப்பமண்டல பெருங்கடல் (Tropical Ocean)
இந்த தீம் பார்க்கில் உள்ள மிகப்பெரிய பகுதியான வெப்பமண்டல பெருங்கடல் பகுதியானது, அருமையான வண்ணங்கள், நடனமாடும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இங்கே பார்வையாளர்கள் டால்பின்கள், ஃபிளமிங்கோக்கள் மற்றும் வெப்பமண்டல பறவைகள், டக்கன்கள் போன்றவற்றைக் காணலாம். அதேவேளை, பரபரப்பான உணர்வைத் தரும் விறுவிறு ரோலர் -கோஸ்டர் சவாரியையும் இங்கே அனுபவிக்கலாம்.
எட்டாம் பகுதி: பாறைகள் மற்றும் மலைக்குகை (Rocky Point)
இது கூடு கட்டும் கடல் சிங்கங்கள் மற்றும் இந்த விலங்குகளுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகளுடன் ஒரு மறைக்கப்பட்ட மலைக்குகையை கொண்டுள்ளது. பசிபிக் வடமேற்கைப் பின்பற்றும் காலநிலையுடன் கூடிய கடல் சிங்கங்களுக்கான மாறும் வாழ்விடங்களையும் இந்த பகுதியில் காணலாம்.
என்ட்ரி டிக்கெட்டுகளின் விலை:
இந்த பிரம்மாண்டமான தீம் பார்க்கின் இணையதளம், பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் மே 23 முதல் டிக்கெட் முன்பதிவுகளை அனுமதிக்கிறது. அதன்படி, பெரியவர்களுக்கு 375 திர்ஹம்களும், சிறுவர்களுக்கு (1.1 மீட்டருக்குக் கீழே) 290 திர்ஹம்களும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இங்கே இலவசமாக நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.