ADVERTISEMENT

குக்கிராமத்தில் இருந்து துபாய் வந்து மல்டி மில்லியனரான இந்தியர்.. யார் இந்த ஜப்பார்..? வாழ்க்கையில் வென்றது எப்படி..?

Published: 25 Jun 2023, 6:33 PM |
Updated: 25 Jun 2023, 7:01 PM |
Posted By: admin

இந்தியாவிலிருந்து வேலை தேடி துபாய்க்கு புலம்பெயர்ந்து வந்த ஒரு சாதாரண இளைஞர் ஒருவர், இன்று அமீரகத்தில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக தனது பெயரையும் பதிய வைத்துள்ளார். யார் அந்த இளைஞர்.. அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கடந்து வந்த பாதைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

ADVERTISEMENT

1990 ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவிலிருந்து வேலை தேடி துபாய்க்கு வந்த ஒரு இளைஞர் தான், இன்று 16 நாடுகளில் 3,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கும் ஹாட்பேக் குளோபல் (Hotpack Global) என்ற முன்னணி பேக்கேஜிங் நிறுவனத்தை தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் மல்டி மில்லினியர் PB அப்துல் ஜப்பார்.

கேரளாவில் சமக்கலா என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜப்பார் தனது ஆறு வயதிலேயே தந்தையை ஒரு விபத்தில் இழந்துள்ளார். அன்று முதல் குடும்ப பாரங்களை சுமக்க ஆரம்பித்த அவர், டீனேஜராக மாறியபோது ​​வளைகுடா பகுதியில் இருந்து வந்தவர்களிடம் இருந்து வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்கும் சிறு வணிக வேலைகளை செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

அதனையடுத்து சில வருடங்களுக்குப் பிறகு, 1990 டிசம்பரில் மாமா ஒருவரின் உதவியில் துபாய் வந்த அவர், அல் ராஸ் பகுதியில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். அந்நிறுவனத்தில், வேலையை வேகமாக கற்றுக்கொண்டு ஒரு வருடத்திற்குள் வணிகத்தின் நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவரது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்காக ஒரு உற்பத்தி நடவடிக்கையை எவ்வாறு இயக்குவது மற்றும் நிர்வகிப்பது என்பதையும், வெளிநாட்டு நிறுவனங்களைக் கையாள்வது, தகவல் தொடர்பு மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கணிசமான அனுபவங்களையும் அங்கிருந்தபடியே  கற்றுக்கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

துணிச்சலுடன் வணிகத்தில் களமிறங்கிய ஜப்பார்:

கற்றல் மீது அவருக்கு இருந்த தீராக் காதல் அவரை வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்கியுள்ளது. ஒருவழியாக, அவரது விடாமுயற்சியின் விளைவாக அவர் உருவாக்கிய நெட்வொர்க் மூலம், பேக்கேஜிங் துறையில் 1995 இல் மஜித் பிளாஸ்டிக்ஸ் என்ற சொந்த முயற்சியைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில், உணவு பேக்கேஜிங் தயாரிப்புகளான டிஸ்போசபிள் பேப்பர் கப் முதல் க்ளிங் ஃபிலிம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

அவரது நிறுவனத்தின் தரமான சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வர ஆரம்பித்தது. இந்நிலையில், அடுத்த இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் முதல் கிளையானது அபுதாபியில் தொடங்கப்பட்டது. அந்த தருணம், தன்னால் வணிகத்தைப் பன்மடங்கு பெருக்க முடியும் என்ற நம்பிக்கை ஜப்பார் மனதில் வேரூன்ற, 2000 இல் ஹாட்பேக் பேக்கேஜிங் தொழில்களை நிறுவினார். அவரது தலைமையில், நிறுவனம் 3,500 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடா முயற்சியும் தொடர் வெற்றியும்:

தொடர்ந்து வெற்றியைக் கண்ட ஹாட்பேக் குளோபல், இன்று மத்திய கிழக்கு, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொராக்கோ, இந்தியா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, ஸ்பெயின், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், 15 உற்பத்தி வசதிகள், 29 கிளைகள், 49 விற்பனை மையங்கள், 3,500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட சர்வதேச பிராண்டுகளை 31 நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள ஹாட்பேக் குளோபல் நிறுவனம், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

பல வெற்றிகளைக் கண்ட ஜப்பார், பின்னர் சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் Envirogreen Carry Bags (India) Private Ltd என்ற புதிய நிறுவனத்தை திருச்சூரில் தொடங்கியிருக்கிறார். இது அங்கு வாழும் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்குவதற்கும் முன் அம்மாவின் ஆசியைத் தேடுவதாகக் கூறிய ஜப்பார்,  தனது அம்மாவின் ஆசியின்றி இவ்வளவு உயரத்தை எட்டியிருக்க மாட்டேன் என்றும். அதனுடன் ஹாட்பேக் நிறுவனத்தில் தனது சகோதரர்களை தன்னுடன் வைத்திருப்பது ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவதாகவும் கூறுகிறார்.

Hotpack நிறுவனம் தொடங்கி இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், 2014ல் NRI தொழில்முனைவோர் விருது, 2016ல் குளோபல் மீடியா நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் விருது, 2021ல் CEO ஃபார் லைஃப் விருது போன்ற பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் அப்துல் ஜெப்பாரின் வெற்றியை அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.