ஓமானில் விஷன் 2040 இன் இலக்குகளின் ஒரு பகுதியாக மசிராவின் விலாயத் பகுதியில் பல்நோக்கு துறைமுகத்தை உருவாக்க ஓமான் திட்டமிட்டுள்ளது என்று வேளாண்மை, மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்தின் செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓமானில் உள்ள பிரபல வானொலி சேனலுக்கு அளிக்கப்பட்ட பேட்டியில், செயல் இயக்குநர் அல்-அமிரி கூறுகையில், மசிரா பகுதியில் துறைமுகம் அமைக்கப்படும் திட்டமானது அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுடன் ஒன்றாகும் என்று பாராட்டியுள்ளார்.
இந்த திட்டத்திற்காக மீன்பிடி வசதிகள், சுற்றுலா தலம், போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்பு சேவை ஆகியவற்றை ஒன்றாக கூடிய ஒரு துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தின் படி, இதற்கான டெண்டர் ஜூன் 26, 2023 அன்று வெளியிடப்பட்டது என்று அல் அமிரி கூறியுள்ளார்.
இதனடிப்படையில் நிலம் மற்றும் கடல் பகுதிகள் உட்பட திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,800,000 சதுர மீட்டர்கள் என அல் அமிரி சுட்டிக்காட்டினார். மேலும் இந்த பகுதியானது மிதக்கும் நங்கூரங்களைக் கொண்டிருக்கும் எனவும் அதன் நீளம் 4,172 மீட்டராக இருக்கும் எனவும் கூறினார். மேலும், இந்த பகுதியானது 330 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு நிலையான கப்பல் துறையினை கொண்டிருக்கும் எனவும், மின்வளத்திற்கு சேவை செய்யும் வகையில் 7 மிதக்கும் நங்கூரங்களைக் கொண்டிருக்கும் எனவும் கூறினார்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் கடலோர காவல் படை உபயோகிக்கும் வண்ணம் 132 மீட்டர் நீளம் கொண்ட பெர்த், கடல் போக்குவரத்திற்கு 132 மீட்டர் நீளமுள்ள நிலையான பெர்த், படகுகளுக்கான ஒரு ஸ்லைடு, பயணிகளுக்கான முனையம் மற்றும் சுற்றுலா படகுகளுக்கான நான்கு பெர்த் ஆகியவை அமைக்கப்படும் என்று கூறினார்.
மசிரா தீவானது பொதுவாகவே பல்வேறு வகையான இயற்கை காட்சிகள் மூலம் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. பல வகையான பறவைகளின் காட்சி, மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரைகள், அற்புதமான கடல் காட்சிகள் மற்றும் கரடு முரடான இயற்கை நிலப்பரப்புகள் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். மேலும்,பல வகையான ஆமைகள் இந்த கடற்கரைக்கு வந்து செல்வதால் அதை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் இங்கு கூடும்.
உலகில் இங்கு மட்டுமே காணப்பெறும் அரிய வகையான லாகர்ஹெட் கடல் ஆமைகள் மற்றும் பச்சை ஆமைகள் போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். எனவே, ஓமானின் வரலாற்றுக்கு சாட்சியாக இருக்கும் இந்த இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த துறைமுகத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.