ADVERTISEMENT

வெளிநாட்டினருக்கான விசாவில் புதிய மாற்றத்தினை கொண்டு வரும் குவைத் அரசு.. 5 ஆண்டு மற்றும் 15 ஆண்டு ரெசிடன்ஸ் விசாக்களை அறிமுகப்படுத்த திட்டம்!!

Published: 24 Jul 2023, 11:56 AM |
Updated: 24 Jul 2023, 12:19 PM |
Posted By: admin

குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களின் ரெசிடென்ஸ் விசாவிற்கான சட்டங்களில் பல திருத்தங்களை குவைத் அரசு மேற்கொள்ள இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கான இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

இந்த புதிய முன்மொழிவின்படி, ஒரு வெளிநாட்டவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் குடியிருப்பு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், முதலீட்டாளர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் அடிப்படையில் 15 ஆண்டுகள் வரை குடியிருப்பு அனுமதி வழங்கப்படும். மேலும், இந்த முதலீடுகளில் இருந்து குவைத் பயனடையும் வகையில் இதற்கு கட்டணம் விதிக்கப்படும் என்றும் திருத்தப்பட்ட சட்டம் தெரிவிக்கின்றது.

மேலும் குவைத் பெண்களின் குழந்தைகளுக்கு 10 வருட குடியிருப்பு அனுமதி வழங்குவதும் இந்த திட்டத்தில் அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குவைத்தில் சொத்து வைத்திருக்கும் ஒருவர் எங்கிருந்தாலும், ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குவைத்திற்கு வந்தால், அவர்களுக்கு குவைத் நாட்டின் ரெசிடென்ஸ் அனுமதி வழங்கப்படும். எனினும் குவைத் நாட்டுப் பெண்கள் இந்த விதியிலிருந்து விலக்கு பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதவிர, வீட்டுப் பணியாளர்கள் நான்கு மாதங்களுக்கு மட்டுமே குவைத்திற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், அதன் பிறகு அவர்களின் ரெசிடென்ஸி அனுமதி தானாகவே ரத்து செய்யப்படும் என்றும் ரெசிடன்ஸ் விசாவினை பற்றிய திருத்தப்பட்ட சட்டங்கள் கூறுகின்றன. எனினும் இவை அரசால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

குவைத் அரசின் இந்த புதிய திருத்தப்பட்ட சட்டங்கள் அவசர கால விசாரணையாக எடுத்துக் கொள்ளப்பட்டு தேசிய சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முன்னால் இதனை பற்றிய முன்மொழிவு விவாதமானது அமைச்சரவையில் நடத்தப்படும் என்றும், அதன் பிறகே அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், அக்டோபர் மாத இறுதியில் நடத்தப்படும் அடுத்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன், நடப்பு கோடைக் கூட்டத் தொடரில் இந்த சட்ட திருத்தமானது அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பு தேசிய சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.