ADVERTISEMENT

ஓமானில் கடும் மழை.. 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!!

Published: 26 Jul 2023, 10:09 AM |
Updated: 26 Jul 2023, 1:11 PM |
Posted By: admin

ஓமான் நாட்டில் இனிவரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் என ஓமான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான வானிலை வரைபடங்கள் மற்றும் தேசிய மல்டி-ஹசார்ட் முன்னெச்சரிக்கை மையத்தின் கணிப்பின்படி இந்த தகவலானது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமான் நாட்டில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மட்டுமல்லாமல் சில இடங்களில் 10-30 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. எனவே, தெற்கு அல் ஷர்கியா, அல் வுஸ்தா மற்றும் தோஃபர் கவர்னரேட்டுகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற மாவட்டங்களிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அங்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஜார் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இங்கு பெய்யும் மழையானது பாலைவனப் பகுதிகளுக்கும் நீடிக்கலாம் என்றும், பாலைவனப் பகுதிகளில் தூசி காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமான் கடல் கரையோரத்தில் கடல் கொந்தளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதிகபட்ச அலை உயரம் 1.5 – 2.5 மீட்டர் வரை இருக்கும் என்றும், மேலும் அரபிக் கடல் கடற்கரையோரங்களில் அதிகபட்சமாக 4 மீட்டர் உயரம் வரை கடல் அலை கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் கடலில் பயணம் செய்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT