ADVERTISEMENT

சம்பளம் அதிகம் செலவு கம்மி..!! உலகின் மிகவும் மலிவான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள துபாய்,அபுதாபி மற்றும் ஷார்ஜா… உண்மைதானா..??

Published: 14 Aug 2023, 5:53 PM |
Updated: 15 Aug 2023, 8:46 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகியவை உலகின் முதல் பத்து மலிவான காஸ்மோபாலிட்டன் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன, இதில் குவைத் முதலிடத்தில் உள்ளது. ஒர்க்யார்ட் ரிசர்ச் (Workyard Research) நடத்திய கணக்கெடுப்பின் படி, குவைத்தில் ஒரு குடியிருப்பாளரின் சராசரி மாத வருமானம் $6,199 மற்றும் அவரது வாழ்க்கைச் செலவினம் $752.70 ஆக இருக்கின்ற நிலையில், குவைத் உலகளவில் மிகவும் மலிவான நகரமாக முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

அதாவது, குடியிருப்பாளர்கள் அவர்களின் அடிப்படைச் செலவினங்களை ஈடுகட்டிய பின்னரும் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை இருப்பு வைத்திருக்க முடியும். அவ்வாறு அதிக வருவாய் கொண்ட நியூயார்க் பட்டியலில் குறைந்த மலிவு நகரமாக இருந்த போதிலும், குவைத் மிகவும் மலிவான நகரமாக பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அதிக வருமானம் மற்றும் குறைந்த வாழ்க்கைச் செலவுகளுக்கான உலகளாவிய பட்டியலில் அபுதாபி இரண்டாவது இடத்தில் உள்ளது. அபுதாபியில் உள்ள குடியிருப்பாளர்கள் சராசரியாக, ஒவ்வொரு மாதமும் சுமார் $7,154 வருமானத்தை ஈட்டுகிறார்கள் மற்றும் $873.10 செலவிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து, சவுதியின் தலைநகர் ரியாத் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சராசரி மாத வருவாய் $6,245 ஆகும், மேலும் $814.90 வரை வாழ்க்கைச் செலவு வருகிறது.

மேலும், துபாய் மற்றும் ஷார்ஜா ஆகியவை நான்காவது மற்றும் ஐந்தாவது மலிவு நகரங்களாகும். துபாயில் மாத வருமானம் $7,118 டாலராக இருக்கின்ற நிலையில், செலவு $1,007 ஆக உள்ளது. அதேபோல். ஷார்ஜாவில் $5,229 என்ற சராசரி மாத வருமானத்துடன் $741.30 வரை செலவு ஏற்படுகிறது.

ADVERTISEMENT

மத்தியக் கிழக்கிற்கு வெளியே, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் சம்பாதிப்பதற்கும் வாழ்வதற்கும் ஒரு நல்ல இடமாகக் கூறப்படுகிறது. இங்கு சராசரி மாத வருமானம் $7,312 மற்றும் வாழ்க்கைச் செலவுகள் சுமார் $1,079.20 வரையிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும், குடியிருப்பாளர்கள் மாதத்திற்கு சுமார் $7,543 சம்பாதிப்பதோடு, வாழ்க்கைச் செலவுகளுக்காக $1,121.50 செலவழிகிறார்கள் என கூறப்படுகிறது. பட்டியலில் 8வது மற்றும் 9வது இடத்தில் லண்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் உள்ளன. இவற்றின் மாத வருமானம் முறையே $8,411 மற்றும் $9,249 ஆகவும், வாழ்க்கைச் செலவுகள் மாதத்திற்கு $1,260.80 மற்றும் $1,440.10 ஆகவும் உள்ளது. இது சற்று அதிகமாகும்.

இவற்றுடன் உலகளாவிய முதல் பத்து மலிவான நகரங்களின் பட்டியலில் சூரிச் இடம் பிடித்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் மாதந்தோறும் சுமார் $9,222 சம்பாதிக்கிறார்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக சுமார் $1,815.20 வரை செலவிடுகிறார்கள்.

மேற்கூறப்பட்ட பட்டியலானது, ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் 20 நகரங்களில் இருந்து தரவை ஆய்வு செய்து, மக்கள் எங்கு நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைத் தீர்மானித்து, சராசரி மாதாந்திர வாழ்க்கைச் செலவுகளையும் ஒப்பிட்டு, அரசாங்கத் தொழிலாளர் ஆதாரங்களில் இருந்து தொகுத்துள்ளனர்.

இந்த பட்டியல் எந்த வேலை மற்றும் என்ன சம்பளம் வாங்கும் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு என்ற தகவல் தெரியவில்லை. கணக்கெடுப்பு எவ்வாறாக இருப்பினும், குறைந்த அளவே மாதாந்திர சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அவர்களின் செலவுடன், தனது குடும்பத்தினருக்காக சொந்த ஊருக்கு அனுப்பும் பணம் ஆகியவற்றிற்கே சம்பளம் சரியாக இருக்கின்றது என்பதே மறுக்க முடியாத உண்மை.