ADVERTISEMENT

ஓமான்: மஸ்கட் மக்கள் தொகையில் ஓமானியர்களை முந்திய வெளிநாட்டினர் … 5 மில்லியனை எட்டிய மொத்த மக்கள் தொகை..!!

Published: 19 Aug 2023, 7:22 PM |
Updated: 19 Aug 2023, 8:30 PM |
Posted By: admin

ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையத்தால் (NCSI) வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 2023க்கான புள்ளியியல் ஆண்டு புத்தகத்தின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஓமான் தலைநகரான மஸ்கட் கவர்னரேட்டில் ஓமானிகளை விட வெளிநாட்டினரின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆண்டுப் புத்தகத்தின் 51வது இதழ் வெளியிட்ட தகவலின் படி, மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள பவுஷர் விலாயத்தில் அதிக எண்ணிக்கையில் 319,921 வெளிநாட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சீப் விலாயத்தில் 268,580 என்ற எண்ணிக்கையில் அதிகபட்சமாக ஓமானியர்களைக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பவுஷர் விலாயத் வெளிநாட்டினருக்கான முக்கிய இடமாக உருவாகி வருவதால், புதிய பல மாடிக் கட்டிடங்கள், மலிவு விலையில் வாடகைகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் சந்தை போன்றவை அதிகமாக இருப்பதும் மேலும் பணியிடங்களுக்கு அருகாமையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இதன் காரணமாக மஸ்கட் கவர்னரேட்டில் அதிகபட்சமாக 837,732 வெளிநாட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்த கவர்னரேட்டில் உள்ள ஓமானியர்கள் 563,724 ஆக உள்ளனர்.

மேலும் 2022-ஆம் ஆண்டின் இறுதியில் ஓமானில் வெளிநாட்டவர்களின் மொத்த மக்கள் தொகை 2,066,239 ஆகவும், ஓமானியர்கள் 2,867,611 ஆகவும் இருந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் 1,723,329 ஆக இருந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்பொழுது உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ஓமானில் உள்ள மொத்த மக்கள் தொகை 2022 ஆம் ஆண்டில் 4,933,850 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஓமானின் மக்கள்தொகை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே 5 மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓமானில் இரண்டாவது அதிக வெளிநாட்டினர் மக்கள்தொகையானது அல் பதீனா நார்த் கவர்னரேட்டில் 2022 இல் 295,460 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2021 இல் 231,705 என்ற எண்ணிக்கையில் இருந்தது. மேலும் 2022 இல் ஓமானியர்களின் மக்கள் தொகை இங்கு 576,554 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது.

மற்றொருபுறம் தோஃபர் கவர்னரேட் பகுதியிலும் வெளிநாட்டினர் ஓமான் நாட்டினரை விட அதிகமாக உள்ளனர். இங்கு, வெளிநாட்டவர்களின் மக்கள் தொகை 260,196 ஆகவும், ஓமானியர்கள் மொத்தம் 226,173 ஆகவும் இருக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2021ல் 200,512 ஆகவும், 2020ல் 201,956 ஆகவும் இருந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை தற்பொழுது 60,000 உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.