ADVERTISEMENT

மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை சந்திக்க தயாராகி வரும் பஹ்ரைன்… கடலோரப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம்..!! நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Published: 20 Aug 2023, 8:25 PM |
Updated: 20 Aug 2023, 8:42 PM |
Posted By: admin

உலகமெங்கும் உள்ள நாடுகள் அனைத்தும் இதுவரை இல்லாதளவு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதீத வெப்பத்தால் பாதிக்கப்படும் ஒரு தீவு நாடான பஹ்ரைன் நாட்டில் வெயிலின் தாக்கம் மட்டுமல்லாது மற்றொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. அதாவது பஹ்ரைனில் கடல் மட்டமானது படிப்படியாக உயர்ந்து வருவதால், இன்னும் சில ஆண்டுகளில் நாட்டின் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் சூழப்படும் அபாயம் உள்ளது என சுற்றுச்சூழல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே கடுமையான வெப்பத்துடன் போராடிவரும் பஹ்ரைன் மற்றொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை போராட தயாராக வேண்டும் என பஹ்ரைனின் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, அடுத்த ஆண்டிற்குள் கடற்கரைகளை விரிவுபடுத்துதல், உயரமான கடல் சுவர்களைக் கட்டுதல் மற்றும் நிலத்தை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் முன்னேறத் தொடங்கிய கடல் மட்டங்களுக்கு எதிராக தனது கடலோரப் பாதுகாப்பை உருவாக்கத் தொடங்கும் எனஅமைச்சரும் காலநிலை விவகாரங்களுக்கான சிறப்புத் தூதருமான முகமது பின் முபாரக் பின் தைனா கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பஹ்ரைன் நாடு எதிர்கொள்ளும் கடல் மட்ட உயர்வானது முக்கிய அச்சுறுத்தல் என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, பஹ்ரைன் நாட்டில் கடல் மட்டமானது ஐந்து மீட்டர்கள் (16.4 அடி) உயர்ந்தால், அதன் சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டின் பெரும்பகுதி மூழ்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து மனாமாவில் உள்ள அரேபிய வளைகுடா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான சபா அல்ஜெனெய்டின் கூற்றுப்படி, கடல் மட்டமானது 0.5 முதல் இரண்டு மீட்டர் உயரம் கூடினால் கூட பஹ்ரைனின் மொத்த பரப்பளவில் 5 முதல் 18 சதவீதத்தை மூழ்கடிக்கும். வளைகுடாவை ஒட்டிய வளங்கள் நிறைந்த நாடுகளில் பஹ்ரைன் மட்டுமே தீவு நாடு. அதன் பெரும்பாலான மக்கள்தொகை மற்றும் முக்கிய இடங்கள் தண்ணீரிலிருந்து ஐந்து மீட்டருக்கும் குறைவான தாழ்வான கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புவி வெப்பமடைதல் மூலம் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதால், உலகெங்கிலும் உள்ள மற்ற தீவுகளும் கடல் மட்டத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.

1976 முதல் ஒவ்வொரு ஆண்டும் கடல் மட்டம் 1.6 மில்லிமீட்டர் முதல் 3.4 மில்லிமீட்டர் வரை உயர்ந்து வருவதை பஹ்ரைன் அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர் என தைனா கூறினார். எனவே, 2050 ஆம் ஆண்டுக்குள், கடல் மட்டம் குறைந்தது 0.5 மீட்டர் உயரக்கூடும் என்று தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் நீர், கடற்கரை பகுதிகளை சூழ ஆரம்பித்தால், ஏற்கனவே நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் உப்பு நீர் சூழ ஆரம்பிக்கும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இதை முதன்மையாக பிரச்சினையாக எடுத்துக் கொண்டு கடற்கரையை அகலப்படுத்தி, சில பகுதிகளில் பாறை கொண்டு சுவரை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டு விரிவான திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்குள் இந்த திட்டமானது முடிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை பஹ்ரைன் நாடு வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேகமான காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் தீவிர வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் வளைகுடாவின் சில பகுதிகளை வாழ முடியாததாக மாற்றும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்தில் பஹ்ரைன் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தனது பங்கைச் செய்ய, சிறிய அளவிலான எண்ணெய் உற்பத்தியாளரான பஹ்ரைன், 2035 ஆம் ஆண்டுக்குள் உமிழ்வை 30 சதவிகிதம் குறைக்கவும், அதே காலகட்டத்தில் அதன் தேவைகளில் 10 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.